பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தோற்றுவாய்

டைச்சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் சரித்திரத்தில் 'இருண்டகால'மாக இருந்தது, கடைச் சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி.பி. 250 என்று கருதப்படுகிறது. கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சங்கச் செய்யுட்களிலிருந்து கிடைக்கின்றன. சங்க நூல்களில் காணப்படுகிற கடைசி சேர அரசன் பெயர் கோக்கோதைமார்பன் என்பது. இவனைக் கோதை என்றும் கூறுவர். கோக்கோதை மார்பன் சேரன் செங்குட்டுவனுடைய மகன். இவன் சிறுவனாக இருந்தபோது இவனுக்குக் குட்டுவன்சேரல் என்று பெயர் இருந்தது. தன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணருக்குச் செங்குட்டுவன் உம்பர்காடு என்னும் நாட்டின் வருவாயையும் தன்னுடைய மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகக் கொடுத்தான்.[1]

புலவராகிய பரணருக்குச் செங்குட்டுவன் தன்னுடைய மகனான குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் என்பதன் பொருள், புலவரிடத்தில் கல்வி கற்பதற்கு மாணாக்கனாகக் கொடுத்தான் என்பதாகும். இளமையில் குட்டுவன் சேரல் என்று பெயர் பெற்றிருந்த இவன் முடிசூடின பிறகு கோக்கோதை மார்பன் என்று பெயர் பெற்றான் என்று அறிகிறோம்.

கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர அரசர்களின் இளைய வழியினரான பொறையர் அரசாண்டார்கள். கொங்கு நாட்டையரசாண்ட கடைசிப் பொறையன் கணைக்கால் இரும் பொறை. இவன் கோதை மார்பனுடைய தாயாதி உறவினன் இருவரும் சம காலத்தில் இருந்தவர்கள். கணைக்காலிரும் பொறை. சோழன் செங்கணானோடு போர் செய்து தோற்றுப் போரில் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டாள். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கொங்கு நாட்டையரசாண்டான். அதாவது சோழன் செங்கணானுக்குக் கீழடங்கி கணைக்காலிரும்பொறை அரசாண்டான். ஆகவே சோழன் செங்கணானும் சேரமான் கோக்கோதை மார்பலும் கணைக்கால் இரும்பொறையும் சமகாலத்தவர் என்று தெரிகின்றனர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டையர சாண்டவன் தெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன், இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற


  1. பதிற்றுப் பத்து, ஐந்தாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு: