பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 122

தொல்காப்பிய அகப்பொருளும்
இறையனார் அகப்பொருளும்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களும் உலகில் வாழ்கிற மாந்தரின் காதல் வாழ்க்கையைக் கூறுகின்றன; மாந்தருக்கும் கடவுளுக்கும் உள்ள தெய்வீகக் காதலைக் கூறவில்லை. இறையனார் அகப்பொருளும் மாந்தரின் உலகக் காதலைத்தான் கூறுகிறது. மாந்தருக்கும் தெய்வத்துக்கும் காதல் உண்டென்று இறையனார் அகப்பொருள் கூறவே இல்லை. ஆனால், அதனுடைய உரை மட்டும், மாந்தருக்கும் தேவருக்கும் உள்ள காதலைக் (பக்தியை) கூறுகிறது. உரை கூறுகிறதேயல்லாமல் நூல் கூறவில்லை. பழைய தொல்காப்பியம் மனிதக் காதலை மட்டும் கூறுகிறபடியால் அது பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பேரின்பக் காதலுக்கு ஓர் ஆதார நூலாகக் கொள்ளப்படவில்லை. பேரின்பக் காதலுக்கு ஆதார நூல் ஒன்று தேவைப்பட்டபடியால் இறையனார் அகப்பொருள் நூல் புதிதாக உண்டாக்கப்பட்டது. இந்த நூலை மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்வதற்காக இறைவனே இந்த நூலை இயற்றினார் என்று கதை கற்பிக்கப்பட்டது.

தமிழ்- அகப்பொருள்

தமிழ் என்னுஞ் சொல்லுக்குத் தமிழ் மொழி, இனிமை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. இச்சொல்லுக்கு அகப் பொருள் என்றும் இன்னொரு பொருளும் உண்டு. ஆனால் இக்காலத்தில் இந்தச் சொல்லும் பொருளும் மறைந்து போயின. பழங்காலத்தில் இந்தப் பொருளில் தமிழ் என்னும் சொல்லாட்சி இருந்தது. கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த கபிலர், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் (அகப்பொருள்) கற்பிக்கக் குறிஞ்சிப் பாட்டைப் (பெருங்குறிஞ்சி) பாடினார். இச்செய்யுளின் அடிக்குறிப்பு ‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது’ என்று கூறுகிறது. இங்குத் தமிழ் என்பதன் பொருள் அகப்பொருள் என்பது.

பரிபாடல் 9-ம் பாடலைப் பாடிய குன்றம்பூதனார் இச்செய்யுளில் அகப்பொருளைத் தண்தமிழ் என்று கூறுகிறார்.[1] இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று உரை எழுதியுள்ளார்.

சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகம் 163-ம் செய்யுளில் அகப்பொருள் தெண்தமிழ் என்று கூறப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரை காண்க.

ஐந்திணை ஐம்பது என்னும் நூல் அகப்பொருளைச் செந்தமிழ் என்று கூறுகிறது. திணைமாலை நூற்றைம்பதின் பாயிரம் அகப் பொருளை இன்தமிழ் என்று கூறுகிறது. பாண்டிக் கோவை 25-ம் செய்யுள் அகப்பொருளைக் கொழுத்தமிழின் ஒண்துறை என்று கூறுகிறது. திருக்கோவையார் 20-ம் செய்யுள் அகப்பொருளைத் தீந்தமிழின்துறை


  1. பரிபாடல் 9: 25-25