பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 130

உரைப்பாயிரத்தின்படி ஆராய்ந்து, களவியலுக்கு உரை கண்ட நக்கீரர் கி.பி.5-ம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறியது முற்றிலும் சரியே. இதையே நாமும் கூறியுள்ளோம். நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, கயிலைபாதி காளத்திபாதித்திருவந்தாதி, திரு ஈங்கோய்மலை எழுபது, இருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிர சாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, கண்ணப்பதேவர் திருமறம் ஆகிய நூல்களைப் பாடிய (இந்நூல்கள் சைவ சமயத் திருமுறைகளில் ஒன்றான பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன) நக்கீரதேவ நாயனார் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் என்று கூறினோம். ஆனால் இந்த நக்கீரர், கடைச்சங்க காலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனையும் தெடுதல்வாடை முதலான சங்கச் செய்யுட்களையும் பாடிய சங்ககாலத்து நக்கீரர் அல்லர் என்றும் கூறினோம். களவியல் உரைப்பாயிரக் கருத்துப்படி இரண்டு வேறு நக்கீரர்களும் ஒருவரே என்று தெரிகின்றனர். இது வரலாற்றுக்குப் பெரிதும் மாறுபாடாக இருக்கிறது. ஆகவே, இறையனார் அகப்பொருள் உரை இரண்டு வேறு நக்கீரர்களை ஒருவரே என்று இணைத்துக் கூறுவது தவறு என்பது நன்றாகத் தெரிகிறது. சங்ககாலத்தில் இருந்த திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரை நக்கீரதேவ நாயனாருடன் பிணைத்துக் கூறினால் இறையனார் அகப்பொருள் உரைக்குப் பெருமதிப்பு ஏற்படும் என்னும் காரணம்பற்றி இரு நக்கீரர்களையும் ஒருவராகப் பிணைத்துக் கூறினார்கள் போலும். ஆனால் இரண்டு நக்கீரர்களும் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள் என்பதும் இருவரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும் பின்பும் இருந்த வெவ்வேறு நக்கீரர்கள் என்பதும் தெரிகின்றன.

திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார், தாம் எழுதிய ‘தமிழர் வரலாறு’ என்ற ஆங்கில நூலில், நான்கு நக்கீரர்கள் இருந்தனர் என்று கூறுகிறார். அவர்களில் முதல் நக்கீரர் திருமுருகாற்றுப் படையையும் பத்துப்பாட்டில் நெடுநல்வாடையையும் சங்கத் தொகைகளில் பல செய்யுட்களையும் பாடியவர். இரண்டாம் நக்கீரர், நாலடி நாற்பது என்னும் செய்யுள் இலக்கணம் எழுதியவர். மூன்றாம் நக்கீரனார், அகப்பொருளுக்கு (இறையனார் அகப்பொருளுக்கு ) முதன்முதல் உரை கண்டவர். நான்காம் நக்கீரர், பிற்காலத்தில் (பதினோராந் திருமுறையில்) சைவப்பாடல்களைப் பாடியவர். இந்த நால்வரையும் தமிழ்ப் புலவர்கள் ஒருவர் என்று இணைத்துக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார்.[1]

இவர் கூறுகின்ற நான்கு நக்கீரர்களை இரண்டு நக்கீரர்களாக அடக்கலாம். ஒருவர் சங்கச் செய்யுட்களையும் நெடுதல் வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் பாடிய கடைச்சங்க காலத்து நக்கீரர். இவர் கி.பி. 2-ம் நூற்றாண்டில் இருந்தவர். இரண்டாம் நக்கீரர் நாலடி நாற்பது என்றும் யாப்பிலக்கண நூலை எழுதியவர் என்று யாப்பருங்கல உரைகாரர் கூறுகிறவரும் இறையனார் அகப்பொருள் உரைக்கு முதன்முதல்


  1. P.T. Srinivasa Aiyangar, History of the Tamils, 1920, p.400.