பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

புறம் ஆகிய துறைகளில் புதிய கருத்துக்கள் விரிந்ததும், அவிநயம், காக்கைபாடினியம், தத்தத்தம், பல்காப்பியம், பல் காப்பியப் புறனடை, பல்காயம் முதலான இலக்கண நூற்களும், நரிலிருத்தம், எலிவிருத்தம், கிளி விருத்தம் முதலான தத்துவ நூற்களும், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலான காப்பியங்களும், கீழ்க்கணக்கு நூற்கள் பலவும் மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி முதலான பல சைவ இலக்கியங்களும் களப்பிரர் காலத்திலேயே உருவாயின. காவியக்கலை தவிர ஓவியம், சிற்பம் முதலான நுண் கலைகளும் வளர்ச்சியுற்றன. இசைக்கலை சிறந்திருந்தது காரைக்காலம்மையின் பாடல்களிலிருந்து வெளிப்படுகிறது. விளக்கத்தார் கூத்து எனப்படும் கூத்து நூலும் இக்கால கட்டத்தியதே. புத்ததத்த மகாதேரர், சங்கமித்திரர், ஜோதிபாலர், சுமதி, காஞ்சி தருமபாலர், தஞ்சை தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், புத்தமித்திரர் போன்ற உலகறித்த அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் பிறந்து சிறந்ததும் களப்பிரர் காலத்தில்தான்.

9. பிற முடிவுகள்: வச்சிர நந்தியின் திரமிள சங்கமும் (கி.பி.470) கடைச் சங்கமும் வேறு வேறு, வையாபுரிப் பின்ளை சொல்வது போல இரண்டும் ஒன்றன்று. முதற் சங்கங்கள் தமிழ் வளர்ச்சிக்காகப் பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப் பட்டவை. வச்சிரநந்தியின் சங்கமோ ஜைனத் துறவிகளுக்கானது. வையாபுரியாரும் சிவராஜப் பிள்ளையும் கருதுவது போல தொல்காப்பியர் திரமிள சங்கத்தைச் சேர்ந்தவரல்லர்; பழைய அகப் பொருளில் இறைவன் மீதான காதலுக்கு இடமில்லையென்பதால் இறையனார் அகப் பொருளுரை எழுதப்பட்டது; சங்க கால நக்கீரரும் களப்பிரர் கால நக்கீர தேவ நாயனாரும் வேறு வேறு என்றாலும் பி.டி.சீனிவாசய்யங்கார் சொல்வது போல நான்கு நக்கீரர்கள் கிடையாது என்பன இந்நூலில் சீனி.வேங்கடசாமி வந்தடையும் பிற முடிவுகளாகும். தொல்காப்பியரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிய வையாபுரிப் பிள்ளையைச் சாடுமிடத்து வேங்கடசாமி அவர்கள் தனக்கியல்பான நடை அமைதியிலிருந்து வழுவி கடுஞ்சொற்களைப் பயன்படுத்துவது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று.

வேங்கடசாமி அவர்கள் அவர் காலத்தில் எழுச்சியுற்றிருந்த திராவிடக் கருத்தியலுக்கு ஆட்பட்டவர். இளமைக்காலத்தில் நீதிக்கட்சியின் 'திராவிடன்' இதழாசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றியவர். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, வடமொழிக் கெதிரான தமிழின் தொன்மை, சைவப் பெருமை இம் மூன்று கூறுகளின் கலவையாகவே தொடக்க காலத் திராவிடக் கருத்தியல் உருவாகியது. திராவிடக் கருத்தியலிலிருந்து சைவப் பெருமையைத் துண்டித்த பணியைப் பெரியார் ஈ.வெ. ரா அவர்களே தொடங்கினார், செய்தார். இதனால் அவர் சைவப் பெருமை பேசியவர்களால் தாக்கப்பட்டது வரலாறு, பெரியாரளவிற்கு சைவத்தை மறுக்காதவராயினும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பொன்றில் தோன்றி வளர்த்த வேங்கடசாமி, இதர வேளாளத் தமிழறிஞர்கள் போல சைவப் பெருமை பாராட்டவும் அவைதீக மதங்களை இழிவு செய்யவும் தயாராக