பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 144

இல்லை . அதே சமயத்தில் இதர திராவிட இயக்கத்தாரைப் போல சங்கப் பெருமையைப் பேசுவதற்கும், தமிழ் இலக்கியங்களின் தொன்மையைக் குலைப்பவர்களைக் கடுஞ்சொற்களால் சாடுவதற்கும் அவர் தயங்கவில்லை. சிலம்பு, மேகலை, குறன், தொல்காப்பியம் முதலானவற்றைக் களப்பிரர் காலத்தை நோக்கிப் பின்னுக்குக் கொண்டு வருபவர்களை அவர் ஏற்கவும் தயாராக இல்லை .

மயிலை சீனி. வேங்கடசாமியவர்களின் சிறப்பு என்பது நான் முன்பே குறிப்பிட்டவாறு தமிழ் மரபிலிருந்து சமணத்தையும் பவுத்தத்தையும் ஒதுக்கி அந்நியமாக்குவது இயலாது என்பதை வற்புறுத்தியதிலும் அதன் வாயிலாகத் தமிழ்த் தொன்மையின் பன்மைத் தன்மையை வலியுறுத்தியதிலேயுமே அடங்கியுள்ளது.

வேங்கடத்தைத் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பகுதியாக ஏற்றுக் கொள்ளும் வேங்கடசாமி எடுமை நாட்டை, களபப்புப் பகுதியை தமிழிலிருந்து முற்றிலும் வேறுபடுகிற கருநாடக தேசம் என்கிறார். அதே தருணத்தில் பிற சைவத் தமிழறிஞர்களைப் போல களபப்புப் பகுதியைச் சேர்த்தவர்களான களப்பிரரை அந்நியர்களாகவும், எதிரிகளாகவும் கட்டமைக்கத் தயாராக இல்லை. அவர்களைத் தமிழகத்துக்கு அண்மையில் இருந்தவர் எனவும் திராவிட இனத்தவர் எனவும் அனைத்துக் கொள்ளும் பாங்கு குறிப்பிடத்தக்கது. களப்பிரர் காலத்தை interregnum ஆகவும் களப்பிரரை அவர் interlopers ஆகவும் அவர் கருதவில்லை. களப்பிரர் காலத்தில் சைவம் சற்றே தாழ்வுற்றிருந்திருக்கலாம். அதன் பொருட்டு தமிழ்ப் பண்பாடு அழிவுற்றது எனச் சொல்ல இயலாது என்று கருதும் அவர் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மையைக் காட்டிலும் தொடர்ச்சியையும் ஏற்றத்தையுமே காண்கிறார்.

சமூகத்தின் பன்மைத் தன்மையை ஏற்றுக் கொண்டவராயினும் வரலாற்று இயக்கத்தில் அடித்தள மக்களின் (Subalterns) பங்கிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் பார்வையை அவர் பெற்றிருந்தாரில்லை. மீண்டும் வரலாறு என்பதை அரச வமிச வரலாறாக, அணுகும் பார்வையே அவரிடமிருந்தது. வரலாற்று இயக்கத்தில் அரச நடவடிக்கைகட்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சி, உற்பத்தி வடிவங்கள், சமூக உருவாக்கம் ஆகியவற்றிற்கு அளிக்கவும் இவற்றினடியான முரண்பாடுகள் ஆகியவற்றினடிப்படையில் வரலாற்று இயக்கத்தைப் பார்க்கவும் அவர் தயாராக இல்லை. எனவேதான் சங்கப் பொற்காலத்தின் வீழ்ச்சிக்கு அன்றைய போர்ச்சூழலே காரணமென்றும், ஓயாத போரின் விளைவால் பலவீனமுற்ற தமிழ் நாட்டின் மீது பிறநாட்டார் படையெடுப்பு சாத்தியமாயிற்று என்றும் களப்பிரர் காலத்தோற்றத்தை அவர் விளக்க வேண்டியதாயிற்று. சங்க காலப் போர்ச் சூழலின் பின்னணி குறித்து அவர் யோசிக்கவில்லை.

களப்பிரர் வீழ்ச்சி குறித்தும் அவரால் முழுமையாக விளக்க இயலவில்லை. சமண மத ஆதரவு இருந்த போதிலும் களப்பிரருக்கு நாட்டில்