பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

அரசியலாதரவு இல்லை என்று சொல்வதோடு முடித்துக் கொள்ள வேண்டியதாகிறது. யாருடைய அரசியலாதரவு? பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்குக் கிடைத்த அரசியலாதரவு களப்பிரர்க்குக் கிடைக்காமற் போனதேன் முதலான கேள்விகட்கு வேங்கடசாமியிடம் பதிலில்லை.

களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகக் குறித்த சைவ அறிஞர்கள் அனைவரும் வேள்விக்குடிச் சாசனத்தையே முழு அடிப்படையாகக் கொண்டதன் விளைவாக, இருண்ட காலம் என்பதை மறுக்கப் புகுந்த வேங்கடசாமி வேள்விக்குடி சாசனத்தை முழுமையாக ஒதுக்குகிறார். அதனை மறுவாசிப்புச் செய்யப் புகுந்தாரில்லை. களப்பிரர் காலத்தில் பார்ப்பனர்களுக்கான தானங்கள் இறக்கப்பட்டமை குறித்து வேள்விக்குடிச் செப்பேடு தெளிவாக இயம்புகிறது. இதை வேங்கடசாமி ஏற்கத் தயாராக இல்லை, எனினும் தானம் இறக்கப்பட்ட செய்தியை அவரால் மறுக்கவும் முடியவில்லை. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். என்ன காரணம் என அவர் விளக்கவில்லை. அவரது அணுகல் முறையில் அது சாத்தியமுமில்லை . எனவே இருண்ட காலம், விடியற்காலத்தோடு நின்றுவிடுகிறது; பகற் காலத்தை எட்டவில்லை.

4

களப்பிரர் கால ஆய்வை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றவர்கள் என இருவரைக் குறிப்பிடத் தோன்றுகிறது. ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி; மற்றவர் பர்ட்டன் ஸ்டெய்ன். களப்பிரர் காலத்தை ஆராய்வது இவ்விருவரின் நோக்கங்களுமில்லையாயினும் தமது ஆய்வு போக்கில் இவர்கள் தொட்டுச் சென்றுள்ள புள்ளிகள் வேங்கடசாமியவர்கள் விட்ட இடத்திலிருந்து மேற்செல்ல நமக்குப் பயன்படுகின்றன.

காலத்தால் ஓராண்டு பிற்பட்டதாயினும் முதலில் சிவத்தம்பியின் "ஆய்வை எடுத்துக் கொள்வோம். பழந் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்கிற அவரது நூலில் சங்ககாலச் சமூக உருவாக்கம் குறித்து பல முக்கிய சிந்தனைகளை அவர் முன் வைக்கிறார். விவசாயம் முதன்மை பெறாத (non-agriculture) சமூக அமைப்பிலிருந்து விவசாயச் சமூகமாக தமிழகம் உருப்பெறுதல், ஆரிய மயமாதல், வேந்துருவாக்கம் ஆகியவற்றைச் சங்க காலச் சமூகத்தின் முக்கிய கூறுகளாக அவர் காண்கிறார். வடக்கே ஆரியமயமாதல் என்பது அதிகம் அரசியற்தன்மையுடையதாக இருப்பதையும் தெற்கே அது அதிகம் கலாச்சார வடிவிலமைவதையும் சுட்டிக்காட்டும் பேராசிரியரின் கவனம் பார்ப்பனியமயமாதலுக்கும் விவசாயச் சமூக உருவாக்கத்திற்கு மிடையிலான உறவின் பால் திரும்புகிறது.

சங்க காலத்திற்குப் பிந்திய அரசியல் இருண்மையின்பால் கவனம் கொள்ளும் சிவத்தம்பி,

"சங்க காலப் பாண்டிய சோழ அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான