பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 156

அத்தோடு உருக்கொள்கிறது. இது பின்னாளில் ஆலயம் சார்ந்த ஆகம வழிபாடுகளாகப் பரிணாமம் பெறுகிறது. விவசாயமயமாதல் என்பது இவ்வாறு வைதீகத்துடன் இணைந்த போது, இதனால் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலைக் குடிமக்களாகவும், அடிநிலைச் சாதியினராகவும் உட் செரிக்கப்பட்ட மக்கட் குழுவினர் அவைதீக மரபுகளோடு இனம் காண்பது தவிர்க்க இயலாததாயிற்று. புத்தர், மகாவீரர் இருவருமே இமயமலைச் சரிவிலுள்ள சாக்கியர் என்னும் இனக் குழுவில் உதித்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

தமிழகத்தைப் பொருத்த மட்டில் சங்க கால வேந்துருவாக்கங்களையும் அவர்தம் விவசாய விரிவாக்க முயற்சிகளையும், வேள்வி முதலான சடங்குகளில் அவர்க்கிருந்த ஈடுபாட்டையும், பார்ப்பானர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களையும் அதன் விளைவாக விளிம்பிற்குள் தள்ளப்பட்டவர்களுக்கும் விவசாயச் சமூகத்திற்குமிடையே விளைந்த முரண்களையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். ஸ்டெய்ன் குறிப்பிடுவது போல இந்த முரண்கள் மற்றும் தொடர்ந்த போராட்டங்களில் விவசாயம் சாராத அடி நிலை மக்கள் மேலாண்மை பெற முயற்சித்த காலமாகவே களப்பிரர் காலத்தைப் பார்ப்பது தகும். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் இறக்கப்பட்ட தென்பது இத்தகைய அடிநிலை மக்களது மேலாண்மையின் விளைவேயாகும். சிதறுண்டு கிடந்த இம் மக்கட் குழுவினர் ஒரு வலிமையான மையப்படுத்தப்பட்ட ஆட்சியொன்றை நிறுவ இயலாமற் போயிற்று, அவர்களது குறிக்கோளும் அதுவன்று.

தமிழகம், மலையாளம், தெலுங்கு நாடு, கருநாடகம் என்ற இன்றைய வரையறுக்கப்பட்ட அரசியல் புவியியல் எல்லைகளினூடாக அன்றைய அரசியலை நோக்க இயலாது என்பதை தாம் நினைவிற் கொள்ளுதல் அவசியம். இன்றைய கருநாடகத்திலுள்ள சிரவணபௌகோளாப் பகுதியிலிருந்த சற்றே வலிமை வாய்ந்த போர்ச் சமூகம் ஒன்று இச்சூழலில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். அக்கால அரசியலில் இது மிகவும் இயல்பான ஒன்றுதான். இன்றைய தமிழகப் பகுதியில் களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்ற சம காலத்தில் இன்றைய தெலுங்கு நாட்டில் இங்கிருந்து சென்ற சோழநாட்டைச் சேர்ந்த ரேணாட்டுச் சோழர்கள் (தெலுங்குச் சோடர்கள்) ஆட்சி புரிந்ததையும் இலங்கையின் இன்றைய சிங்களப் பகுதிகளை இங்கிருந்து சென்ற பாண்டியர்கள் ஆட்சி புரிந்ததையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே களப்பிர ஆட்சிக் காலத்தை அந்திய ஆட்சிக் காலமாகவும், இருண்ட காலமாகவும், அக்காலகட்டத்தில் மேலாண்மை பெற்றவர்களை எதிரிகளாகவும் கட்டமைப்பது சைவ உயர்சாதி ஆதிக்க அரசியலுக்கு வேண்டுமானால் பயன்படலாமேயொழிய அன்றைய வரலாற்றைப் புரிந்து கொள்ளப்பயன்படாது,

வேளாண்மை சாராத இம் மக்களால் அரசியலதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாததையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. தல அளவில் நிலை பெற்றுவிட்ட பார்ப்பன நிறுவனங்கள், உள்ளூர் பார்ப்பன