பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

வேளாள அதிகாரத் தலைமைகள் ஆகியனவும் வேளாண் சாராத இம் மக்களின் மேலாண்மைக்கு எதிராக இருந்தன. களப்பிரருக்கு அரசியலாதரவு இல்லாமற் போயிற்று என வேங்கடசாமியவர்கள் சொல்வதன் பொருள் இதுதான்.

களப்பிரர் காலம் குறித்து மேலும் விளக்கங்கள் பெற வேண்டுமானால் அக் காலத்தில் எழுதப் பெற்ற பாலி மற்றும் பிராகிருத மொழியிலான நூற்களை விரிவாக ஆராய வேண்டும். சங்க இலக்கியங்களை முற்றிலும் புதிய மறு வாசிப்பிற்குள்ளாக்க வேண்டும். அன்றைய சாகுபடி முறைகள், சீறூர் மன்னர்கள், இதர இனக்குழு மக்களின் வாழ்க்கைகள் முதலியன மறுபார்வைக்குள்ளாக்கப் பட வேண்டும். சைவத்தையும் வைதீகத்தையும் இயற்கையானதாகவும், உள் நாட்டினதாகவும் இவையல்லாத ஏனைய மரபுகளை, குறிப்பாக அவைதீக மரபுகளை அயல் நாட்டினதாகவும், எதிரியாகவும் கட்டமைக்கிற வரலாற்றுப் பார்வையிலிருந்து நாம் விடுபட வேண்டும். தமிழகம் போன்ற வேறுபட்ட புவியியற் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாட்டினது பண்பாட்டின் பன்மைத் தன்மைகளைப் புறக்கணிக்கும் வன்முறைக்கு வரலாறெழுதியலில் இடமளிக்கலாகாது. அறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிற தலையாய பாடம் இதுவே.

'டிசம்பர் 13, 2000.'
55, ரோசரி சர்ச் இரண்டாம் சந்து,
மயிலாப்பூர் - சென்னை 600004.

அ.மார்க்ஸ்





குறிப்பு:நீலகண்ட சாஸ்திரி, மு.அருணாசவம், கா. சிவத்தம்பி, பர்ட்டன் ஸ்டெய்ள், டேவிட் ஆர்னால்டு ஆகியோரின் மேற்கோள்கள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. முக்கியச் சொற்கள் அடைப்புக் குறியில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.