பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பிற்சேர்க்கை -2

(இப்பகுதியை மயிலை சீனி.வேங்கடசாமியவர்கள் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. எனினும் வாசகர்கட்குப் பயன்படும் பொருட்டு நாங்கள் இப்பதிப்பில் சேர்த்துள்ளோம்- விடியல்)

வேள்விக்குடிச் சாசனம் (தமிழ்ப் பகுதி)

[1]

கொல்யானை பலவோட்டிக் கூடாமள்ளர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராஜனால்
நாகமா மலர்ச்சோலை நனிர்சினை மிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்களாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத
கொற்கைகிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்பு நின்று வேள்விகுடியென் றப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேத்த எப்பொழுதே
நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின்
னளவரிய ஆதிராஜரை யகல நீக்கி யகலிடத்தைக்
களப்ரனென்றும் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கிய பின்
படுகடன் முளைத்த பருதிபோல பாண்டியாதிராஜன் வெனிற்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பாலுரிமை திறவிதி னீக்கித்
தன்பாலுரிமை நன்கன மமைத்த
மானம் பேர்த்த தானை வேந்தன்
னொடுங்கா மன்ன ரொளிதக ரழித்த
கடுங்கோ ளென்னுங் கதிர்வேற் றென்னன்;
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி
மலர்மங்கை ஒடு மணனயர்ந்த
அற்றமி லடர்வேற்றானை ஆதிராஜன் அவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்ம்மன்; மற்றவற்கு

.


  1. சாசனத்தில் தமிழில் அமைந்துள்ள பகுதி மட்டும் இங்கே தரப்படுகிறது. அடிக்கோடிட்ட சொற்கள் மூலத்தில் கிரந்த எழுத்துக்களில் அமைந்துள்ளன. கழக வெளியீடான (1967) பாண்டியர் செப்பேடுகள் பத்து நூலில் உள்ளவாறு இங்கு சாசனம் அச்சிடப்பட்டுள்ளது. முதல் 16 வரிகள் வரை கலிப்பகை என்னும் சொல் தவிர மற்ற அனைத்தும் வட எழுத்துக்களால் அமைத்துள்ளன. 47ம் வரியும் அவ்வாறே வட எழுத்துக்களால் அமைத்துள்ளது.