பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மயிலை சீனி வேங்கடசாமி

கரிகாற் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்களே தவிர, அவன் காலத்தைத் தொடர்ந்து இரேணாட்டையரசாண்டதாகக் கூறவில்லை.

இரேணாட்டுச் சோழர்கள் எழுதியுள்ள சாசனங்களில் சிலவற்றை இங்குச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவது பொருத்தமாகும்.

கடப்பை மாவட்டம் ஜம்மல மடுகு தாலுகாவில் கோ சினெ பள்ளி கிராமத்தில் ஒரு களத்து மேட்டில் கருங்கற்றூண் ஒன்று இருக்கிறது. இந்தத் தூணின் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்தில் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இதில் சோழ மகாராசன் என்னும் அரசன் பெயர் காணப்படுகிறது. இந்த அரசன், கரிகாற் சோழனுடைய பரம்பரையில் சூரிய குலத்தில் காசிப கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்கிறான்.[1] மேற்படி தாலுகாவில் முட்டனூருக்கு அருகில், சிலம்கூரிலிருந்து வருகிற சாலையின் ஓரத்தில் உள்ள கருங்கற்சாசனம், சோழ மகாராசன் ஆதித்தபட்டாரகருக்கு நிலத்தையும் பொன்னையும் தானஞ்செய்ததைக் கூறுகிறது.[2] இந்த ஊரிலேயே உள்ள சிவன் கோயில் முற்றத்தில் கிடக்கிற கல்லில் சோழ அரசனுடைய கல்வெட்டெழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனக் கல்லின் அடிப்புறம் உடைந்து கிடக்கிறது. கல்லின் மேற் புறத்தில் சாசன எழுத்துக்கு மேலே, வாலைச் சுருட்டிக் கொண்டு நிற்கிற புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.[3] புலியின் உருவம் சோழருடைய அடையாளக் குறி என்பதையறிவோம். இரேணாட்டுச் சோழரும் புலியின் அடையாளத்தைக் கொண்டிருந்த படியால் இவர்கள் சோழர் குலத்தவர் என்பது தெளிவாகிறது.

கடப்பை மாவட்டம் ஜம்மல மடுகு தாலுக்காவில் பெத்த முடியம் என்னும் ஊரில் சிதைந்து போன கல் எழுத்துச்சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனத்தில் சோழ மகாராசன் என்னும் பெயர் காணப்படுகிறது. சாசனக் கல்லின் மேற்புறத்தில் புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்புலி வாயைத்திறந்து கொண்டு (உறுமிக்கொண்டு) நிற்பது போலக் காணப்படுகிறது.[4] இந்த மாவட்டத்தில் சமயபுரம் தாலுகாவில் சிலம்கூர் என்னும் ஊரில் ஒரு வயலில் உடைந்து கிடக்கிற கற்றூணில் தெலுங்கு எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றன. இதில் சோளமாறாதேவுலு (சோழ மகாதேவர்) என்னும் பெயர் காணப்படுகிறது.[5] இவ்வூர் அகத்தீஸ்வரர் கோவிலின் முன்புறத்தில் விழுந்து கிடக்கிற கற்றூணில் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இச்சாசனத்தில் விக்கிரமாதித்திய சோள மஹாராஜூலு எளஞ்சோள மஹாதேவி (இளஞ்சோழமகாதேவி) என்னும் சோழ அரச அரசியரின் பெயர்கள் காணப்படுகின்றன.[6] கலமள்ள என்னும் ஊரில் உள்ள சென்னகேசவ கோவிலின் முற்றத்தில் உடைந்து கிடக்கிற கற்றூணின் இரண்டு பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதில் இரேணாட்டு அரசன் தனஞ்சயேண்டு என்பவன் பெயர் காணப்படுகிறது.[7]


  1. 408 of 1901
  2. 405 of 61904
  3. 406 of 1904
  4. 351 of 1905
  5. 396 of 1904
  6. .400 of 1904
  7. 380 of 1904