பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மகாயாளப் பௌத்தத் தலைவராக இருந்த சங்க மித்திரன் என்னும் தமிழப் பிக்கு, நாடுகடத்தப்பட்டு வந்த சிங்கள நாட்டுப் பிக்குகள் கூறியதைக் கேட்டுத்தான் இலங்கைக்குப் போய் தன்னுடைய மகாயான பௌத்தத்தை அங்கு நிலை நிறுத்த எண்ணினார். ஆகவே சங்கமித்திரர் இலங்கைக்குப் போய் மேகவண்ணாபய அரசனுடைய சபையில் தேரவாத பௌத்தர்களோடு சமயவாதஞ்செய்து வென்றார். மேகவண்ணாபயன் வெற்றிபெற்ற சங்கமித்திரரை ஆதரித்தான். தன்னுடைய மக்களான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்களைச் சங்கமித்திரரிடத்தில் கல்வி கற்க விட்டான். மேகவண்ணா பயன் காலமான பிறகு அவன் மகனான ஜேட்டதிஸ்ஸன் அரசனானான்.

ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 267-277)

இவன் மேகவண்ணாபயனுடைய மூத்தமகன். இவன் பத்து ஆண்டுகள் அரசாண்டான். இவன் சங்கமித்திரரிடம் கல்வி பயின்ற மாணவன். ஆனால், அவரிடத்தில் இவன் பகை கொண்டிருந்தான். ஆகையால் சங்கமித்திரர் இவன் காலத்தில் இலங்கையிலிருந்து சோழநாட்டுக்கு வந்துவிட்டார்.

மகாசேனன் (கி.பி. 277-304)

ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். இவன் அரசனாவதையறிந்த இவனுடைய குருவாகிய சங்கமித்திரர் சோழநாட்டிலிருந்து இங்குவந்து தம்முடைய கையினாலே இவனுக்கு முடி சூட்டினார். இவ்வரசனுடைய ஆதரவைப் பெற்ற இவர், மகாயான பௌத்த மதத்தை இலங்கையில் பரவச் செய்தார். இலங்கையில் தேரவாத (ஈனயான) மகாயானச் சமயப்பூசல்கள் ஏற்பட்டன. மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த பேர் போன சிவன் கோயில்களை இடித்து அழித்தான்.

ஸ்ரீமேகவண்ணன் (கி.பி. 304-332)

இவன் இலங்கையின் பழைய தேரவாதப் பௌத்தத்தை ஆதரித்தான். பல பரிவேணைகளையும் லிகாரைகளையும் கட்டினான். இவனுடைய ஒன்பதாம் ஆட்சியாண்டில் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தருடைய பல் தாதுவை அநுராத புரத்தில் வைத்துச் சிறப்புச் செய்தான். வட இந்தியாவை இவன் காலத்தில் ஆட்சி செய்தவன் சந்திரகுப்தன் (கி.பி.345-380). ஸ்ரீமேகவண்ணன், சந்திரகுப்த அரசனிடத்தில் இரண்டு பௌத்தப் பிக்குகளைத் தூது அனுப்பி, புத்தகயாவுக்கு யாத்திரை போகிற இலங்கைப் பௌத்தப் பிக்குகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டான். இவன் இருபத்தெட்டு ஆண்டு ஆட்சி செய்தான்.[1] இவனுடைய கல்வெட்டுச் சாசனங்கள் இலங்கையில் கிடைத்துள்ளன. அந்தச் சாசனங்களில் இவ்வரசன் கிரி மேகவண்ண என்றும்


  1. சூலவம்ச ம் 3-ம் பரிச்சேதம் 51-99, Culavamaa Part I Translated by Wirein Geiger. 1929