பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மகாநாமன் (கி.பி. 412-434)

உபதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாநாமன் அரசனானான். இவன் தன்னுடைய அண்ணுடைய இராணியைத் தன்னுடைய பட்ட மகிஷியாக்கிக் கொண்டான். இவர்களுக்கு ஆண் மக்கள் இல்லை. ஒரே ஒரு பெண்மகள் சங்கா என்பவள் இருந்தாள். மகாநாமனுக்கு இன்னொரு மனைவி இருந்தாள். அவன் தமிழ் குலத்தைச் சேர்த்தவள். ஆகவே அவள் தமிழமகிஷி என்று கூறப்பட்டாள். அந்தத் தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்னும் ஒரு மகன் இருந்தான்.

மகாநாமனுடைய ஆட்சிக்காலத்தில் புத்த கோஷர் என்னும் பெயருள்ள பேர் போன பௌத்தப்பிக்கு இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு ஆந்திர நாட்டிலும் பிறகு தமிழ் நாட்டிலும் இருத்தார். தமிழ்நாட்டுப் பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தபோது அவர் சில பௌத்த நூல்களைப் பாலிமொழியில் எழுதினார். காஞ்சிபுரத்துப் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்தபோது, அப்பள்ளியில் இருந்த சுமதி, ஜோதிபாலர் என்னும் தமிழப்பிக்குகள் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அங்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பௌத்தமத உரை நூல்களைக் கற்கும்படித் தூண்டினார்கள், புத்தகோஷர், மகாதாமன் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கி பௌத்த விகாரைகளில் இருந்த சிங்கள உரை நூல்களைக் கற்றார். இலங்கையில் மகாவிகாரையில் இருந்த பௌத்த சங்கத்தலைவரான சங்கபாலர் என்னும் மகாதேரர் புத்தகோஷருக்குச் சிங்கள மொழியில் இருந்த திருபிடக உரைகளைக் கூறினார். அவற்றையறிந்த பிறகு புத்தகோஷர் விசுத்தி மக்கம் முதலான நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். புத்தகோஷர் சோழநாட்டில் இருந்த பேர்போன ஆசாரிய புத்ததத்ததேரர் என்னும், தமிழ்ப்பிக்குவின் சமகாலத்தவர். புத்தகோஷர் தம்முடைய நூலில், சோழ நாட்டயைரசாண்ட அச்சுதவிக்கந்தன் என்னும் களப்பிர அரசரைக் குறிப்பிடுகிறார்.

மகாதாமன் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு காலமானான்.[1]

சொத்திசேனன் (கி.பி.434)

மகாநாமன் இறந்த பிறகு அவனுடைய ஒரே மகனான சொத்திசேனன் இலங்கையின் அரசனானான். இவன் மகாசேன்னுக்கும் அவனுடைய தமிழமகிஷிக்கும் பிறந்த மகன். சொத்திசேனன் முடிசூடின அதே நாளில் அவனுடைய மாற்றாந்தாயின் மகளான சங்கா என்பவளால் கொலை செய்யப்பட்டிருந்தான். சங்காவின் தாய் சிங்களவள். அவள் தன்னுடைய முதல் கணவனான உபதிஸ்ஸனைக் கொன்று அரசாட்சியைத் தன்னுடைய காதலனான மகாதாகலுக்குக் கொடுத்ததையறிந்தோம். அவளுடைய மகளான சங்காவும் தன் தாயைப் போலவே, கொலைக்கு அஞ்சாதவளாய்க் தன்னுடைய தம்பியான தமிழ சொத்திசேனனைக் கொன்று விட்டாள்.


  1. Ibid 210-247