பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

கொடுத்து உரோகண நாட்டின் வரிதண்டும் அலுவலனாக அமைத்தாif. உரோகண நாட்டுக்குச் சென்ற அண்டசேனாபதி மகாநாகன் அங்கேயே தங்கியிருந்து வரிப்பணத்தைத் தானே வைத்துக் கொண்டு சுதந்தரனாக இருந்தான்.[1]

தாட்டாபபூதி (கி.பி.539-540)

சிலாகாலன் காலமான பிறகு அவனுடைய இரண்டாவது மகனான தாட்டாபபூதி தக்கண நாட்டிலிருந்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். மூத்த மகனான மொக்கல்லானன் முறைப்படி அரசுக்கு உரியவன். அவனுக்குரிய ஆட்சியை அவனுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதைக் கடைசித் தம்பியான உபதிஸ்ஸன் கண்டித்தான். கண்டித்தவனைத் தாட்டாபபூதி கொன்று விட்டான். கிழக்கு நாட்டிலிருந்த மொக்கல்லாளன், தனக்குரியதான ஆட்சியைத் தன்னுடைய தம்பியான தாட்டாபபூதி கைப்பற்றிக் கொண்டதையறிந்து படையெடுத்து வந்து போர் செய்யத் தொடங்கினான். இருவர் சேனையும் போர்க்களத்தில் சந்தித்தன. அப்போது மொக்கல்லானன், தாட்டாபபூதிக்கு இவ்வாறு செய்தி யனுப்பினான்: நமக்காக போர் வீரர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவர் மட்டும் போர் செய்வோம். போரில் வென்றவருக்கே அரசாட்சியுரியதாகும். என்று சொல்லியதற்குத் தாட்டாபபூதியும் இசைந்தான். இருவரும் தங்கள் தங்கள் யானை மேல் அமர்ந்து போர் செய்யத் தொடங்கினார்கள். மொக்கல்லானனுடைய யானை தாட்டாப பதியின் யானையைத் தன்னுடைய தந்தங்களினால் குத்திற்று. குத்துண்ட யானை அஞ்சிப் புறங்கொடுத்து ஓடிற்று. அப்போது தனக்குத் தோல்வி நேரிடப் போவதையறிந்த தாட்டாபபூதி தன்னுடைய போர் வாளை எடுத்துத் தன்னையே குத்திக்கொண்டு இறந்து போனான். தாட்டாபபூதி ஆறு திங்கள் ஆறு நாட்கள் அரசாண்டான்.[2]

மொக்கல்லானன் II (கி.பி.540-560)

தாட்டாபபூதி இறந்த பிறகு அவனுடைய அண்ணனான மொக்கல்லாளன் இலங்கையை அரசாண்டான். இரண்டாம் மொக்கல்லானனாகிய இவனைச் சுல்ல மொக்கல்லானன் (சிறிய மொக்கல்லானன்) என்று கூறுவர். இவன் இருபது ஆண்டு அரசாண்டான்.[3]

கீர்த்தி ஸ்ரீமேகன் (கி.பி.560-561)

மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய இராணி, உறவினர்களை நஞ்சு இட்டுக் கொன்று விட்டு அரசாட்சியைத் தன்னுடைய மகனான கீர்த்தி ஸ்ரீமேகனுக்குக் கொடுத்தாள். அவன் அரசாட்சியைத் தானே நடத்தினாள். கீர்த்தி ஸ்ரீமேகவண்ணனுக்கு முன்பு ஒரு கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன் இருந்தபடியால் இவனைக் குட்டநீர்த்தி ஸ்ரீமேகவண்ணன் என்று கூறுவர்.


  1. Ibid 69-89, 26-41
  2. Ibid 42-53
  3. Ibid 54-63