பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

48

மர்தனன் என்பவன் வாதாபிஜிக் (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியோடு போர் செய்து வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றின முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் (மாமல்லன்காலத்தில்) இந்தப் பரதுர்க்கமர்தன்ன் இருந்தான் என்பதும், இவன் நரசிம்மவர்மன் சார்பாகப் புலிகேசியோடு போர் செய்து வாதாபியை வென்று 'வாதாபிஜித்' என்று பெயர் பெற்றான் என்பதும் தெரிகின்றன. வாதாபி நகரம் கி.பி.642 - ம் ஆண்டில் வெல்லப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர் யாவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே இருக்குவேனாகிய பரதுர்க்க மர்த்தனன் கி.பி.642-ல் இருந்தவன் என்பதில் சற்றும் ஐயமில்லை . இவனுடைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இவனுக்கு முன்னும் பின்னும் இருந்த இருக்குவேள் அரசர் காலங்களை ஒருவாறு அறியலாம். தலைமுறையொன்றுக்கு 30 ஆண்டு என்று கணக்கிட்டால் கீழ்வருமாறு இவர்களின் காலம் தெரிகிறது.

இருக்குவேள் அரசர் உத்தேசமான காலம்
கி.பி.
1. இருக்குவேள்[1] 435-465
2. பரவீரஜித்து 465-495
3. வீரதுங்கன் 495-525
4. அதிவீரன் 525-555
5. அநுபமன் (சங்ககிருத்து) 555-585
6. நிருப கேசரி 585-615
7. பரதுர்க்க மர்த்தனன் 615-645
8. சமராபிராமன் 645-675
9. பூதிவிக்கிரம கேசரி 675-705
10. பராந்தகன் 7O5-735
11. ஆதித்திய வர்மன்[2] 735-765

இதில் கூறப்படும் ஆட்சி ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கூடுதல் குறைதலாக இருக்கக் கூடும்.

இதில் கூறப்பட்ட இருக்குவேள்களில் முதல் ஐந்து பேர் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கியிருந்தவர் என்று தெரிகின்றனர். 6, 7, 8 எண்ணுள்ள அரசர் பல்லவ அரசர்களைச் சார்த்து அவர்களுக்கு அடங்கியிருந்தனர். 9, 10, 11 எண்ணுள்ள அரசர், அக்காலத்தில் சிற்றரசர் நிலையில் இருந்த சோழர் குலத்தோடு உறவு கொண்டு பல்லவ அரசருக்கு எதிரிகனாக இருந்தனர்.


  1. பாண்டியனுடைய யானைப்படையை முறியடித்தவன். இவனுடைய பெயர் கல்வெட்டில் மறைந்துவிட்டது.
  2. M.Arokiaswamy, The Eary Hstry dl the Vellar Basin, 1954 p 61,