பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


களப்பிரரின் வீழ்ச்சி

ளப்பிரர் தமிழகத்தை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன மதமும் பௌத்த மதமும் நெடுகப்பரவி வளர்ந்து செல்வாக்கடைந்து பெரும்பான்மையோர் மதங்களாக இருந்தபடியாலும் களப்பிரரும் சைன சமயத்தவரானபடியாலும் அவர்களுக்கு நாட்டில் ஆதரவு இருந்தது. களப்பிரர் முக்கியமாகச் சைன சமயத்தை ஆதரித்தார்கள், சைன சமயத்துக்கு அடுத்தபடியாகப் பௌத்த மதத்துக்குச் செல்வாக்கிருந்தது. களப்பிரரை சூலவம்சம் என்னும் சிங்கள நாட்டு நூல் திகத்தர் (ஜைனர்) என்று கூறுகிறது. மொக்கல்லானன் என்னும் சிங்கள அரசகுமரன் தமிழ் நாட்டுக்கு வந்து களப்பிர அரசரை உதவி கேட்டபோது அவர்கள் அவனுக்கு சேனைத் தலைவரைக் கொடுத்து உதவினார்கள். இதைக் கூறுகிற சூலவம்சம் களப்பிரர் பெயரைக் கூறாமல் நிகந்தர் (ஜைனர்) என்று கூறுவதை முன்னமே காட்டினோம். ஆகவே களப்பிரர் நிகந்தர் என்று அழைக்கப்பட்டனர் என்பது தெரிகிறது. களப்பிரருக்குப் பெரும்பான்மை மதமான ஜைன மதத்தின் ஆதரவு இருத்த போதிலும், நாட்டில் அரசியல் ஆதரவு இல்லையென்றே தோன்றுகிறது. சேர சோழ பாண்டியர் களப்பிரரை வீழ்த்துவதற்குச் சமயம் பார்த்திருந்தார்கள். தொண்டைநாட்டிலிருந்த பல்லவ அரசர் களப்பிரரை வென்று அவர்களுடைய ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நேரத்தைப் பார்த்திருந்தனர். களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த பாண்டியர் தாங்கள் சுதந்திரம் பெறுவதற்குப் பெருமுயற்சி செய்ததாகத் தெரிகிறது. களப்பிரர் ஆட்சிக்காலத்திலேயே, பாண்டிய அரசர் குலத்தைச் சேர்ந்த ஒரு பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் சிங்கள அரசனை வென்று இலங்கையை அரசாண்டான். அவனுடைய பிள்ளைகளும் பேரர்களும் அவனுக்குப் பிறகு அரசாண்டதை முன்னமே அறிந்தோம்.

கி.பி.6-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர் களப்பிரரை வென்று தங்களுடைய பாண்டிய இராச்சியத்தை மீட்டுக் கொண்டார்கள். பாண்டியன் கடுங்கோன் பாண்டு நாட்டு ஆட்சியைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்டான் என்று பாண்டியர் செப்பேடுகள் கூறுகின்றன.

"அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங்கலி அரைசன் கைக் கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பரிதி போல பாண்ட்யாதி ராஜன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோலோச்சி வெண்குடை நீழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பாலுரிமை நன்கன மமைத்த மானம் பேர்த்த தானைவேந்தன் னொடுங்கா மன்னரொலி நிகரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற்றெள்ளான்" என்று வேள்விக்குடிச்