பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

51

பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றிருந்தனர் என்று அறிகிறோம். முத்தரையர் என்னும் பெயர் சேர, சோழ, பாண்டியம் என்றும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்னும் பொருளுள்ள சொல்லாக இருக்கலாம். முத்தரையர், செந்தலை தஞ்சாவூர் நாடுகளை யரசாண்டார்கள், முத்தரையர் களப்பிரர் அல்ல என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். "அன்றியும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரே யாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று.[1]

செந்தலைத் தூண் சாசனங்களிலிருந்து முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிகிறோம். திருக்காட்டு பள்ளிக்கு (தஞ்சை மாவட்டம்) இரண்டு கல் தொலைவில் செந்தலைக் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மண்டபத் தூண்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை செந்தலைத் தூண் கல்வெட்டுகள் என்று கூறப்படுகின்றன. இந்தச் சாசனங்களைத் திரு.டி.ஏ. கோபிதாத ராவ் செந்தமிழ் ஆறாம் தொகுதியில் வெளியிட்டுள்ளார். திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தத் தமிழ்ச் சாசனங்களை ஆங்கில எழுத்தில் 'எபிகிறாபியா இத்திகா' என்னும் இதழில் வெளியிட்டுள்ளார்.[2] இந்தச் சாசனத்தில்

பெரும்பிடுகு முத்தரைய னாயின குவாவன் மாறன்
அவன் மானிளங் கோ வதியரைய னாயின மாறன்பரமேஸ்வரன்
அவன்மகன் பெரும்பிடுகு முத்தரைய னாயின சுவரன் மாறன்
அவன் எடுப்பித்த படாரிகோயில் அவன் எறிந்த ஊர்களும்
அவன் பேர்களும் அவனைப் பாடினார் பேர்களுமித் தூண்கண்மே
லெழுதின இவை

என்று காணப்படுகிறது.

நான்கு தூண்களிலும் பெரும் பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ஸ்ரீகள்வர கள்வன் என்று நான்கு தூண்களிலும் எழுதப்பட்டுள்ளது. கள்வர கள்வன் என்பதைக் களவர கள்வன் என்றும் படிக்கலாம். இதிலிருந்து முத்தரையரும் களவர கள்வரும் (களப்பிரரும்) ஒருவரே என்பது தெரிகிறது. முத்தரையரை நாலடியார் கூறுகிறது.[3]

விடேல் விடுகு முத்தரையன், சத்துருபயங்கர முத்தரையன் என்னும் முத்தரையர் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

களப்பிரரின் பின் சந்ததியார் களப்பாளர் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சிவஞான போதத்தை எழுதிய மெய்கண்ட தேவருடைய தந்தையாரின் பெயர் அச்சுதகளப்பாளர் என்பதாகும். நெற்குன்றம் கிழான் என்றும் ஒரு களப்பாள சிற்றரசன் ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான்.[4]


  1. பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, 1969, பக்கம் 12.
  2. Epigraphia Indica Vol XIII, Sendalai Pillar inscriptions, pp 134-149
  3. நாலடியார், தாளாண்மை 10, மானம் 6.
  4. செந்தமிழ், தொகுதி 12, பக்கம், 268.