பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு வந்தது என்று கூறினோம்.[1] பௌத்தப் பிக்குகள் நாடெங்கும் பிரசாரஞ் செய்து பௌத்தமதத்தை வளர்த்தார்கள். ஆகவே பெளத்த மதம் பையப் பைய வளர்ந்து தமிழ்நாட்டில் சிறப்படைந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தம் தமிழ் நாட்டில் மேலும் பரவி வளர்த்தது. தமிழகத்துக்குப் பக்கத்தில் உள்ள இலங்கையிலும் பௌத்தமதம் பரவியிருந்தபடியால் அதன் காரணமாகவும் பௌத்தமதம் வலிவு பெற்றிருந்தது.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் பிண்டியர் போதியரையும் சாக்கியர் சமணரையும் கூறுகிறார்கள். (பிண்டியர் -சமணர், போதியர் - பௌத்தர், சாக்கியர்- பௌத்தர், சமணர் - ஜைனர்) தேவார காலத்துக்கு முன் (கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பு) களப்பிரர் காலத்தில் சமணசமயத்தைப் போலவே பௌத்தமதமும் செழித்திருந்தது. களப்பிரர் காலத்தில் இருந்த பௌத்தர்களின் ஊர்கள் சில தெரிகின்றன. காவிரிப் பூம்பட்டினம், உறையூர் (உரகபுரம்), பூதமங்கலம், சங்கமங்கை , நாகைப்பட்டினம், மயூரபட்டணம், மதுரை, பாண்டிநாட்டுத் தஞ்சை, காஞ்சிபுரம் முதலான ஊர்கள் பௌத்தமதம் வேரூன்றியிருந்த ஊர்களாகும்.

சாக்கிய நாயனார்

திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணத்தில்) சாக்கிய தாயனார் புராணமும் ஒன்று. சாக்கிய நாயனார் பௌத்த மதத்தவர். (சாக்கியம் - பௌத்தம்) இவர் பழைய சிவனடியார்களில் ஒருவர். பௌத்தராக இருந்து கொண்டே சிவனை வழிபட்டவர். கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்த்திருந்த திருநாவுக்கரசருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தவர். சாக்கிய நாயனார், தொண்டை நாட்டில் சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தார். பிறகு காஞ்சிபுரத்துக்குப் போய் அங்கு அக்காலத்தில் பேர்போன பௌத்த ஆசிரியர்களிடம் சென்று சமயக்கல்லி பயின்றார். வயது வந்த பிறகு துறவு பூண்ட இவர் ஆடையணிந்து பௌத்தப் பிக்கு ஆனார்.[2] சில காலஞ்சென்ற பிறகு சைவ சமயத்தை மேற்கொண்டார். சிவலிங்க வழிபாடலைச் செய்ய எண்ணினார். ஆனால், அக்காலத்தில் பௌத்த மதம் பலமாக இருந்த படியால், வெளிப்படையாகப் பௌத்த மதத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர இயலாமற்போயிற்று. சிவலிங்கப் பூசைசெய்த பிறகு உணவு கொள்ள வேண்டும் என்று அவர் உறுதி கொண்டார். இவர் அணிந்த பௌத்தத் தோற்றத்தை மாற்றாமலே ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து, அக்கல்லை மலர் போலப் பாவித்துப் பூசை செய்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார். இச்செயலைக்கண்ட பௌத்தர் சிவலிங்கத்தைக் கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இதனால், அக்காலத்தில்


  1. மயிலை சீனிவேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்.
  2. சாக்கியநாயனர் புராணம் 3, 3, 4