பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

76

செய்யப்பட்ட நூல் என்பது தெரிகிறது. நூறு செய்யுட்களைக் கொண்ட நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது.

சீவகசிந்தாமணி

நரிவிருத்தத்தைப் பாடிய திருத்தக்கதேவர் தம்முடைய ஆசிரியரின் அனுமதிப்படி சிந்தாமணிக் காவியத்தை இயற்றினார். இது சீவகசிந்தாமணி என்றும் மாணநூல் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரக் காவியத்துக்கு அடுத்தபடி, சிறந்த காவியமாகப் போற்றப்படுகிறது. புதிய விருத்த யாப்பினால் இயற்றப்பட்ட முதல் காவியம் இது. சீவக சிந்தாமணியின் தலைவனான சீவககுமாரன் வர்த்தமான மகாவீரரின் காலத்தில் இருந்தவன். மகாவீரர் நிர்வாணமோட்சம் அடைந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. எனவே சீவகனும் அந்தக்காலத்தில் இருந்தவன் ஆவன்.

இவ்விடத்தில் ஒரு செய்தியை விளக்கிக்கூற வேண்டும். சீவக குமாரன், பல்லவதேசத்தின் அரசன் மகளை மணஞ்செய்தான் என்று கூறப்படுகிறான். பல்லவ தேசம் என்பது எது என்பதை அறியவேண்டும். பல்லவ அரசர் தமிழ் நாட்டுத் தொண்டை மண்டலத்தைக் கி.பி. 5-ம் நூற்றாண்டு முதல் சிறப்பாக அரசாண்டதை வரலாற்றினால் அறிகிறோம். கி.மு.6-ம் நூற்றாண்டிலிருந்த சீவகன் கி.பி.6-ம் நூற்றாண்டில் இருந்த பல்லவ அரசன் மகளை மணஞ்செய்ய இயலுமா? "படுமழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும், தடமலர்க் குவளை பட்டத்தழுவிய யாணர் நன்னாடு" (1185) என்றும், "கோங்குபூத் துதிர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த, பாங்கமை பருமயானைப் பல்லவ தேசமன்னன்," (2253) என்றும், "பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேய மன்னன், சேவகன் சிங்கதாதன் செருக்களம் குறுகினானே" (2278) என்றும் பல்லவ தேசமும் பல்லவ தேயமன்னனும் சீவக சிந்தாமணியில் கூறப்படுகின்றனர். இங்கு கூறப்பட்ட பல்லவ தேசம் தமிழ் நாட்டில் இருந்த பல்லவ தேயம் அன்று. சீவகன் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் பல்லவ தேசமும் பல்லவ அரசரும் இருந்திலர். இதில் கூறப்படுகிற பல்லவதேசம் இப்போது ஈரான் என்று பெயர் கூறப்படுகிற பழைய பாரசீக தேசமாகும். பழைய பாரசீக தேசத்தையாண்டவர் பல்லவர் என்றும் அந்த நாடு பஃலவ நாடு என்றும் கூறப்பட்டது. பஃலவ தேசம் என்றது தமிழில் பல்லவதேசம் என்றாயிற்று. சீவக சிந்தாமணி கூறுகிற பல்லவதேசம் பழைய பாரசீக நாடாகிய பஃலவ தேசம் ஆகும்.

சீவக சிந்தாமணி களப்பிரர் ஆட்சிக்காலத்தில், சமணசமயம் ஓங்கிவளர்த்திருந்த காலத்தில், கி.பி. 5, அல்லது 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகுகம். [1]


  1. சீவக சிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலர் 1952, பக்கம் 217 சீவக சிந்தாமணி கி.பி. 8-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று இந்நூலாசிரியர் முன்பு எழுதியது தவறு. செந்தமிழ்ச் சித்தாமணி, கால ஆராய்ச்சி என்றும் கட்டுரையில் கி.பி. 8ம் நூற்றாண்டில் சிந்தாமணி எழுதப்பட்டதென்று இத்நூலாசிரியர் எழுதியுள்ளார். அது தவறு என்பதும் கி.பி. 5 அல்லது 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இப்போது தெரிகிறது.