பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை தீனி வேங்கடசாமி 92

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருவதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம்

கருவிருந் தாலிக்கும் போழ்து

என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள்.

ஐந்திணை ஐம்பது

அகப்பொருளைப் பற்றிய ஐந்திணைகளும் பத்துப்பத்துப் பாக்களினால் இயற்றப்பட்டதாதலின் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. இதைப் பாடியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இதன் பாயிரச் செய்யுள்,

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வள்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியார்த்த
ஐந்திணை யைம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

செந்தமிழ் சேராதவர்

என்று கூறுகிறது. இதில் செந்தமிழ் என்பது அகப்பொருளைக் குறிக்கிறது. தமிழ் என்பதற்கு அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு. அகப்பொருளைத்தான் இச்செய்யுள் செந்தமிழ் என்று கூறுகிறது.

திணைமொழி ஐம்பது

அகத்திணை ஐந்துக்கும் திணையொன்றுக்குப் பத்துச் செய்யுளாக அமைத்து ஐம்பது பாக்களினால் இயற்றப்பட்டது இந்நூல், இயற்றியவர் கண்ணன் சேந்தனார். இவருடைய தந்தையாரின் பெயர் சாத்தந்தையார். ஆகவே இவர் சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனார் என்று கூறப்பட்டார்.

ஐந்திணை எழுபது

இந்நூலும் அகப்பொருள் ஐந்திணைகளைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகளுக்கு எழுபது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பெயர் மூலாதியார். இதன் கடவுள் வாழ்த்துக் கணபதியாகிய பிள்ளையாருக்குரியது.

எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்து நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்

கண்டத்தான் ஈன்ற களிறு