பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 94

முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியற் கொள்கைக் - கணித்தார்
இணைமாலை யீடிலா வின்றமிழால் யாத்த

திணைமாலை கைவரத் தேர்ந்து

இந்தப் பாயிரத்தைப் பற்றித் திரு. சதாசிவ பண்டாரத்தார் தம்முடைய கருத்தைக் கூறியுள்ளார்கள். அதனை (பாயிரத்தை) நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப்பொருளாகிய களவியலை வெறுத்துக் கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அவர்கள் கொண்டிருந்த வெறுப்பினைப் போக்க வேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. சைவ வைணவருக்கும் பௌத்த சமணருக்கும் அகப்பொருள் பற்றிக் கருத்து வேற்றுமை அக்காலத்தில் இருந்தது. பக்தி இயக்கம் தோன்றிய அக்காலத்தில் அகப் பொருளுக்குப் பேரின்பக் (தெய்வ) காதல் கொள்கையைச் சைவ-வைணவ சமயத்தார் புதிதாகக் கற்பித்துத் தங்கள் சமயத்தில் செய்யுட்களை இயற்றினார்கள். ஆனால், இந்தக் கொள்கையைப் பௌத்த சமயத்தாரும் சமண சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளாமல் இக்கொள்கைக்கு மாறுபட்டிருந்தார்கள்.

இந்தப் பாயிரச்செய்யுளில் ‘ஈடிலா இன்தமிழால் யாத்த திணைமாலை’ என்று கூறப்படுகிறது. இதில் ‘இன்தமிழ்’ என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது என்பது தெரிகிறது. ‘ஐந்திணை ஐம்பது’ என்னும் நூலின் பாயிரச்செய்யுளில் செந்தமிழ் என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது என்பதைக் கண்டோம்.[1]

கைந்நிலை

இதுவும் அகத்திணைபற்றிய நூல், ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடல்களையுடைய அறுபது வெண்பாக்களைக் கொண்ட சிறு நூல், தென் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இச்சிறு நூலிலுள்ள சில வெண்பாக்கள் அழிந்து மறைந்து போயின. இந்த நூலை 1931-ம் ஆண்டு திரு. அநந்தராமையர் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார்கள். இதுவும் பதினெண்கீழ்க் கணக்கைச் சேர்ந்த நூல்.[2]

✽✽✽

  1. அகப்பொருளுக்குத் தமிழ் என்னும் பெயர் இருந்தது என்பதை மயிலைசீனிவேங்கடசாமி எழுதிய 'தமிழ் அகம்' என்னும் கட்டுரையில் காண்க. Jour nal of Tamil Studies, No 3 Sep. 1973.
  2. மயிலை விவேங்கடசாமி, 19-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், 1942 (பதினென் கீழ்க்கணக்கு வரலாற்றைக் காண்க.)