பக்கம்:கழுமலப்போர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அதனால் அம்மக்களுள் ஒரு சிலர், தாம் வாழ்ந்த அக்குறிஞ்சி நிலத்தின் நீங்கி, அந்நிலத்தைச் சேர்ந்துள்ள பாலையுள் சென்று தங்கினர். பாலை, குறிஞ்சி போல் வளம் நிறைந்தது அன்று. ஆகவே, ஆண்டுச் சென்றவர், ஆண்டே வாழ்தல் இயலாது போயிற்று; அப்பாலையையும் கைவிட்டு, அதை அடுத்துள்ள முல்லை நிலத்தில் வாழிடம் தேடினர்.

முல்லை, பாலை போல் வளமற்ற வன்னிலமாகாது, வாழ்வதற்கு ஓரளவு வாய்ப்பளிக்கும் நிலமாக விளங்குவது கண்ட அம்மக்கள், அந்நிலத்தில் நிலையாக வாழத் தலைப்பட்டனர். காடுகளை அழித்துப் பயிரிடவும் பழகினர். விலங்குகளோடு வாழ்ந்து பழகிய பழக்கத்தின் விளைவால், அவ்விலங்குகளுள் ஆடு, மாடு, எருமை போன்றன உடன் வைத்துப் பேணத் தக்கன; பெரும்பயன் தருவன என உணர்ந்தனர். அதனால், அவற்றைப் பெருமளவில் வைத்துப் போற்றினர். அவற்றையே, அவர், தம் செல்வமாகக் கருதினர். அவர் செல்வ வாழ்வை அளந்து காணும் அளவுகோலாக அவை கொள்ளப் பட்டன. அவற்றை நிறையக் கொண்டார் செவ்வ வாழ்வினராவர் எனவும், குறையக் கொண்டார் வறுமையால் வாடுவோர் எனவும் மதிக்கப் பெற்றனர். இவ்வாறு ஆனிரைகளைப் பேணிப் பெருக்கி வாழ்ந்தமையால், முல்லை நிலம்புக்க மக்கள் வாழ்வு ஓரளவு அமைதியுடையதாயிற்று. நிற்க.

வாழ்க்கையைக் குறிஞ்சி நிலத்தில் தொடங்கிய மக்கள் அனைவருமே முல்லையுள் குடி புகுந்து விட்டாரல்லர். ஒரு சிலர் அக்குறிஞ்சியிலேயே தங்கிவிட்டனர். ஒருசிலர் இடைவழியில் உள்ள பாலை நில வாழ்க்கையிலேயே பழகிவிட்டனர். ஆனால், பாலை, குறிஞ்சி நிலத்தின் மலைவளமோ, முல்லை நிலத்தின் காட்டுச் செல்வமோ வாய்க்கப் பெறாத வன்னிலமாதலின், ஆண்டுத் தங்கியவர்கள், வாழ்க்கைக்காம் வழிகாணது வருந்தினர். வயிற்றுப் பசி, அவர்கள் உள்ளத்தில் வற்றாச் சினத் தீயை மூட்டிற்று. பழிபாவங்களை அவர்கள் எண்ணிப் பாரா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/10&oldid=1355448" இலிருந்து மீள்விக்கப்பட்டது