பக்கம்:கழுமலப்போர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பாரா பாலை நிலத்தைக் கடந்து வருவார் போவார் கொண்டு செல்லும் பொருள்களைக் கொள்ளையடித்துண்ணும் கொடியராயினர், பாலையில் ஆறலைத்து வாழும் வாழ்வினராய் மாறிய அம்மறவர், தமக்கு வேண்டும் பொருளை அவ் வழியில் பெற இயலாக் காலத்தில், பாலையை அடுத்துள்ள நிலங்களுட் புகுந்து கொள்ளையிட்டு மீளும் வாழ்க்கையினை மேற்கொண்டனர். பாலையை அடுத்து ஒரு பால் குறிஞ்சியும், ஒரு பால் முல்லையும் உளவெனினும், குறிஞ்சி, ஆண்டு வாழ்வார்க்கு வேண்டும் பொருள்களைத் தருவதே அரிது; ஆகவே ஆண்டு உறைவார் ஈட்டி வைக்கும் பொருள் எதுவும் இராது என்பதை அக்குறிஞ்சியில் ஒருகாலத்தில் இருந்து வாழ்ந்தமையால், அம்மறவர் அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் தமக்குப் பொருட் குறைபாடு உண்டான காலத்தில், குறிஞ்சி நிலக் குறவர்பால் செல்லக் கருதவில்லை. முல்லை நிலத்து ஆயர்கள், ஆடு மாடுகளைப் பழக்கி, ஒன்று பலவாகப் பெருக்கிப் பயன் கொண்டு வாழ்கின்றனர் என்பதை அறிந்து, அம் மறவர் தமக்கு உணவுக் குறை உண்டாந்தோறும் முல்லை நிலம் புகுந்து. ஆயர்களின் ஆனிரைகளைக் களவாடி வருதலை வழக்கமாகக் கொண்டனர்.

காட்டில் மேய்ந்துகொண்டிருந்த தம் ஆனிரைகளைப் பாலை நிலத்து மறவர் கவர்ந்து செல்கின்றனர் எனக் கேட்ட முல்லை நிலத்து ஆயர், செய்யும் தொழிலையும் மறந்து, காடு நோக்கி விரைந்து ஓடுவர். மறவர் கவர்ந்து செல்லும் ஆனிரை, அவர்க்குரிய பாலை நிலத்து ஊர்களை அடைந்துவிடுமாயின், அவை அவர்க்குள்ளாகவே பகுத்துக் கொள்ளப்படுமாதலாலும், அம் மறவர்க்கு அவர் ஊர்க்கண் ஆற்றல் மிகுந்துவிடுமாதலாலும், அவர்கள் ஆனிரைகளோடு காட்டைக் கடவா முன்பே சென்று, ஆயர்கள் அவர்களை மடக்கிப் போரிட்டு வென்று துரத்திவிட்டுத் தம் ஆனிரைகளை மீட்டுக் கொணர்வர், இவ்வாறு பாலை நிலத்து மறவார் கவர்ந்து சென்ற தம் ஆனிரைகளை மீட்டுக்கொணர ஆயர் அம் மறவரோடு செய்யும் போரே வெட்சிப் போராம். ஆனிரைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/11&oldid=1355452" இலிருந்து மீள்விக்கப்பட்டது