பக்கம்:கழுமலப்போர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கவர்தலும், மீட்டலும் குறித்து நிகழ்ந்த போர்கள் பல தமிழ் நூல்களில் கூறப்பெற்றுள்ளன. [1]நிற்க.

பாலை நிலத்து மறவர் களவாட, முல்லை நிலத்து ஆயர் மீட்டுவரும் இம்முறை, காலம் செல்லச் செல்லச் சிறிது மாறுதலாயிற்றது. ஆனிரைகளுக்கு அண்டை நிலத்தவரால் அவ்வப்போது இடையூறு உண்டாவதைக் கண்ட ஆயர், தம் பொருளையும் தம்மையும் காக்கவல்ல தலைவன் ஒருவன் தேவை என உணர்த்தனர். தம்முள்ளே தக்கான் ஒருவனைத் தேர்ந்து தலைவனாக்கினர். கோலினத்தைக் காக்கும் கடமை மேற்கொண்டு கோன் எனப் பண்டு அழைக்கப் பெற்றவனே, பிற் காலத்தில் அரசன் என அழைக்கப் பெற்றான். நிற்க ஆனிரைக் குரியவர், தமக்குள்ளே அரசளைத் தேர்ந்து கொண்டயை கண்ட மறவரும் தமக்குள்ளே ஒரு தலைவனைத் தேர்ந்து அரசனாக்கினர். இந்நிலை உண்டான பின்னர்ப் போர் முறையில் புதுமைகள் இடம் பெற்றன, பகைவர், தம் ஆனிரைகளைக் கவர்ந்து செல்கின்றனர் என்ற செய்தி கேட்டும், ஆயர், பண்டேபோல் தாயே சென்று மீட்டு வருதலைக் கைவிட்டுக், காவலன்பால் சென்று நிகழ்ந்தது கூறுவர். அரசன், தன் நாற்படையோடு சென்று, அப்பகைவரை வென்று ஆயர்களின் ஆனிரைகளை மீட்டுத் தருவன். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற சேர வேந்தன் ஒருவன், தன்னாட்டு ஆயர்க்குரிய ஆடுகளைத் தண்டகாரணியத்தில் வாழ்வார் சிலர் வந்து கவர்ந்து சென்றார் எனக் கேட்டுப் படையோடு சென்று அவ்வாடுகளை மீட்டுக் கொணர்ந்து உரியவர்பால் ஒப்படைத்தான்; அவனாற்றிய செயலின் அருமை அறிந்து, அக்கால மக்கள், அவ்வெற்றிச் சிறப்பை அவன் பெயரோடு இணைத்துப் பெருமை செய்தனர்.


  1. “வேந்து விடு முனைஞர், வேற்றுப் புலக் களவின்
    ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்.”

    -தொல். பொருள், புறம் 1 2.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/12&oldid=1379005" இலிருந்து மீள்விக்கப்பட்டது