பக்கம்:கழுமலப்போர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பண்டு பசியால் வருந்திய பாலை நிலத்து மறவர், தம் அண்டையில் வாழ்வார் நிலத்துள், அவர் அறியாவாறு புகுந்து, அவர்களின் ஆனிரைகளைக் களவாடிக் கொணர்ந்து, கொன்று உண்டு வாழ்ந்த கொடிய ஒழுக்கம் நாள் ஆக ஆக, நாட்டு மக்கள் உள்ளத்தில் நாகரீகமும் நற்பண்பும் வளர வளர, படிப்படியே மாறி, இறுதியில் ஒரு நாட்டின் மீது, படை தொடுக்க விரும்பும் அரசன் ஒருவன், அந்நாட்டு ஆனிரைகள், தன் படையால் பாழுறா வண்ணம் காத்தற் பொருட்டும், ஒரு நாட்டின் மீது, அந்நாட்டார் அறியாத நிலையில் படை தொடுத்தல் அறமாகாது என உணர்ந்து, அந்நாட்டின் மீது தான் படை தொடுக்கப்போவதை முன் அறிவித்தற் பொருட்டும், அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொணர்த்து பாதுகாக்கும் நல்லொழுக்கமாகி விட்டது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பேரரசன் ஒருவன், பகை நாட்டின் மீது படை தொடுக்கும் முன், “பகை நாட்டு ஆனிரைகளே! ஆவின் இயல்புடைய அந்தணர்களே! பெண்களே! பிணியுற்றவர்களே! மக்கட் பேறுபெறாத மாவீரர்களே! யாம் விரைந்துவந்து விவ்வனைத்து அம்பு ஏவுவம்; ஆகவே, நீவிர் அரண்மிக்க இடம் தேடி அடையுங்கள்” எனப் பறையறைந்து அறிவித்துவிட்டு பின்னர்ப் போர் புரியும் அறவழி நின்று அரசு புரிந்தான் எனப் புறநானூறு கூறுகிறது. [1]நிற்க.


  1. “ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
    பெண்டிரும், பிணி உடையிரும், பேணித்
    தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போல் புதல்வர்ப் பெறா அதீரும்
    எம் அம்பு கடி விடுதும், நும்மரண் சேர்மின் என

    அறத்தாறு நுவலும் பூட்கை”
    —புறநானூறு 1 9.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/13&oldid=1355731" இலிருந்து மீள்விக்கப்பட்டது