பக்கம்:கழுமலப்போர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

போர் நிகழ்ச்சிகளைக் கூறும் தொல்காப்பியரும் பிற ஆசிரியர்களும் போர் இத்தனை வகைப்படும் என்றுதான் கூறுகின்றனரே அல்லது, போர் நிகழ்வதன் முன் வெட்சியும் கரந்தையும், அதாவது ஆனிரை கவர்தலும், ஆனிரை மீட்டலும் நிகழ்ந்தேயாதல் வேண்டும் என்று கூறவில்லை. போர் பல காரணங்களை முன்னிட்டு எழும், பொன்னாசையால் எழும் போர், மண்ணாசையால் எழும் போர், பெண்ணாசையால் எழும் போர், புகழாசையால் எழும் போர் என அது பலவகைப்படும். அவற்றுள் இது பொன்னாசையின் ஒரு பகுதியாய்ப் பகை நாட்டுப் பொருளை எல்லாம் பெறவேண்டும் எனப் பேராசை கொள்ளாது, அவர்களுடைய ஆனிரைகளை மட்டும் பெற்றால் போதும் என்ற ஆசை காரணமாய் எழுந்த போரும் அதன் பின் விளைவுமாம் என அறிக.

நிரை கவர்தலும், நிரை மீட்டலும் முறையே சென்று தாக்குவாராலும், நின்று தாங்குவாராலும், தம் போர் நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சிகளாக மேற்கொள்ளப் பெறுவனவே. அந் நிகழ்ச்சிகள், அவ்வரசர்கள் மேற் கொள்ளும் பிற போர்களோடு தொடர்புடையன ஆகா. நிறைகவர்தல் போரிலும், நிரை மீட்டல் போரிலும் தொழிலாற்றும் படைகள், இருதிறத்தார்களின் எல்லைக் கண் நிற்கும் படைகளே. இரு பேரரசர்களோ, அவர்களின் நாற் படைகளோ, ஈடுபடுவதில்லை.

வாழ்க்கைத் தரம் உயர உயர, ஒருவன் ஆசைகளும் பலவாம். ஆசைகள் பலவாம் எனினும், அவற்றைப் பொன் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை என்ற முப்பெரும் பிரிவினுள் அடக்கிவிடலாம். ஆகவே, அரசன் ஒருவன், பகைவர் நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு வரவும், பகைவர் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளவும், அந்நாட்டு அரசன் மகளை மணம் செய்து கொள்ளவும் ஆசை கொண்ட வழியே படை எடுத்துச் செல்வான். இவற்றுள், பகைவர் நாட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/14&oldid=1355480" இலிருந்து மீள்விக்கப்பட்டது