பக்கம்:கழுமலப்போர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

செல்வங்களைக் கருதிப் போருக்கு எழுதல் முதற்படியாகும். அது பாலை நிலத்து மறவர் செயலைக் காட்டிலும் சிறிதே வேறு படும். பகைவர் நாட்டுப் பசுநிரைகளை மட்டுமே கவர்ந்து வரச் செல்லுதல் முதல் நிலை; பகை நாட்டுப் பெரும் பொருள் அனைத்தையுமே கைப்பற்றி வரச் செல்லுதல் முடிந்த நிலையாம். பொருளைக் கவர்ந்து வரப் போருக்கு எழும் வழக்கத்தை மேற்கொண்ட வேந்தன், காலம் செல்லச் செல்ல, பொருள் வேண்டும்போதெல்லாம் படையெடுத்துச் செல்வதைக் காட்டிலும், பொருள்வளம் மிக்க அந்நாட்டையே கைப்பற்றித் தனதாக்கிக்கொள்வது நன்று என நினைப்பான். நினைத்தவாறே, பகைதாட்டை வென்று கைப்பற்ற போருக்கு எழுவான்; இது இரண்டாம் நிலை. நல்ல நாடும், அதனால் நிறைபொருளும் பெற்று வாழும் அரசனுக்கு, இன்ப நுகர்வில் நாட்டம் உண்டாதல் இயல்பு. ஆகவே, அந்நிலையில், அவன், வேற்றரசர்பால் அழகுள்ள மகளிர் வாழக் கண்டு அவரை மணந்து வாழ மனங் கொள்வதும், அதற்கு அவ்வரசர் மறுத்தால், அவர்மீது படையெடுத்துப்போவதும் நிகழும், இது மூன்றாம் நிலை.

பகையரசனுக்குரிய பெரிய படை தன் நாட்டின் எல்லைக்குள் புகுந்துவிட்டது. இப்போது படையெடுத்து வரும் அவன் கருத்து ஆனிரை கவர்தல் அன்று. தன் நாட்டுப் பெரும் பொருளையோ, அல்லது தன்னாட்டின் வளமிக்க பகுதியையோ, அல்லது தன் மகளையோ கருதியே அவன் வருகிறான். ஆகவே, அதற்கேற்பப் பெரும் போர் புரியத்தக்க நாற்படைகளுடனேயே வருகிறான் என அறிந்த அந் நாட்டரசன், பாய்ந்துவரும் பகைவர் படையால் பாழுற்றுப் போகாதபடி நாட்டைக் காப்பான்கருதித், தன் படைகளோடு விரைந்து, அப்படை தன் நாட்டுள் புகுந்துவிடாதபடித் தடுத்து நிறுத்திப் போர் புரிவன். இவ்வாறு, இம்மூவாசை கருதிப் படையெடுத்து வந்தவனை வென்று துரத்தும் வேந்தன் செயல்களை வஞ்சிப் போர் எனப் பெயரிட்டுப் பாராட்டியுள்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/15&oldid=1355486" இலிருந்து மீள்விக்கப்பட்டது