பக்கம்:கழுமலப்போர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ளார், ஆசிரியர் தொல்காப்பியனார்.[1] போர் தொடுத்தலும், அடித்துத் துரத்தலுமாகிய இந்நிகழ்ச்சிகளெல்லாம், வந்த வேந்தனுக்குரிய எல்லைப் பகுதியும், வென்று துரத்திய வேந்தனுக்குரிய எல்லைப் பகுதியும் ஆகிய இரு நாட்டுப் புற நாடுகளில் நிகழும் நிகழ்ச்சிகளே ஆம். படைதொடுப்பதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள், புகுந்த அரசன் நாட்டெல்லையில் நிகழும். அடித்துத் துரத்துவது போன்ற போர் நிகழ்ச்சிகள், துரத்திய அரசன் நாட்டெல்லையில் நிகழும்.

மண்ணாசையால் படை கொண்டு வந்த அவனை, அடித்துத் துரத்திய இவன், அவன் படையெடுத்து வந்தான் என்பது ஒன்றைக்கொண்டே எதிர்க்கக் கருதினவனாவன். ஆகவே, இவன் வினை, அவனை வென்று ஓட்டுவதோடு முடிந்துவிடும். அவன், தன் நாட்டு எல்லையைக் கடந்து ஓடிவிட்டான் என்பதை அறிந்தவுடனே, இவன் மீண்டுவிடுவன். அவனை மேலும் துரத்திச் சென்று, அவன் நாட்டைக் கைப்பற்றக் கருதான். அவன் நாடு, இவன் நாட்டைக் காட்டிலும் வளம் செறிந்த நாடன்று. மாறாக வளம் குன்றிய நாடு அது. வளமார் நாட்டில் வாழ்வார் எவரும், வளம் குன்றிய நாட்டினைக் கைப்பற்றி ஆளக்கருதார். அதனால் அவர்க்குக் கேடல்லது ஆக்கம் உண்டாதல் இல்லை.

ஒரு நாட்டை, அரசன் ஒருவன் கவர்ந்துகொள்ள விரும்புகின்றான் என்றால், அந்நாடு அவன் நாட்டைக் காட்டிலும் சிறந்து விளங்கும் நாடாதல் வேண்டும். “பெரும் பொருளால் பெட்டக்க”, நாடுகளையே பகைவர் பற்றிக் கொள்ள விரும்புவர். நிறைபொருளும், மிகுவளனும், உடைமையால்


  1. “வஞ்சிதானே, முல்லையது புறனே”
    “எஞ்சா மண்நசை வேந்தனை, வேந்தன்
    அஞ்சுதகத் தலைச் சென்று அடல்குறித் தன்றே”

    —தொல் பொருள். புறம் 1 6, 7.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/16&oldid=1355497" இலிருந்து மீள்விக்கப்பட்டது