பக்கம்:கழுமலப்போர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வளம் மிக்க நாட்டை, அரிதாகவே காணல் கூடும். அக்கால அரசர்கள், காடுகளைச் சிறிது சிறிதாக அழித்து நாடு கண்டு வந்தனர். அப்பணியை பெரும் அளவில் புரிந்து வெற்றி கண்ட கரிகாற் பெருவளத்தானை, “காடுகொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி” எனப் புலவர்கள் வாயார வாழ்த்தியுள்ளமை காண்க. ஆகவே, அக்கால நாடு ஒவ்வொன்றும் தன்னைச் சூழப், பரந்த காட்டுப் பகுதிகளைக் கொண்டிருந்தது என்பது உண்மை. ஆகவே, இரு நாடுகளுக்கிடையே, இரு நாடுகளுக்கும் உரிய காட்டுப்பகுதிகளே இடம் பெறும். ஆக, நாடு பிடிக்க விரும்புவான் ஒருவன், முதற் கண், தன் அண்டை நாட்டானுக்குரிய காட்டுப் பகுதியையே கைப்பற்றுவன். ஆகவே, நாடு கவர்தல் குறித்தும், அதைக் காத்தல் குறித்தும் நிகழும் போர், அக்குறுங் காடுகளிலேயே நிகழும்.

மண்ணாசை கொண்டு மாற்றனொடு போரிடப் போந்த ஒரு வேந்தன், அப்போரை விரும்பி மேற் கொண்டவனாதலின், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, பகைவன் நாட்டுள் புகுந்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய பெரும் படையோடு, தனக்கு ஏற்ற காலத்தில் திடுமெனப் புகுந்திருப்பன். ஆனால், அவன் பகைவன். அவ்வாறு வந்தவனல்லன். பகையரசன், படையோடு புகுந்து, தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதறிந்தவுடனே விரைந்து வந்தவனாவன். அந்நிலையில் பகைவன் படை பலம் யாது? தன் படைபலம் யாது என்பன பற்றியோ, அக்காலம், தன் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் காலம் தானா என்பதையோ எண்ணிப் பார்த்தல் இயலாது. உள்ள படையைக்கொண்டு, உடனே புறப்படவே அவன் உள்ளம் துடிக்கும். தனக்குத் துணைபுரிவாரைத் தேர்ந்து, அவரை உடன் அழைத்துப் போகவும் ஒண்ணாது. இக்காரணங்களால், அவன் படைதொடுத்து வந்தானை வெல்லமாட்டாது, தோற்றுப் போதலும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/18&oldid=1360715" இலிருந்து மீள்விக்கப்பட்டது