பக்கம்:கழுமலப்போர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இந்நிலை உண்டானது, வயல் வளமும், வாணிகவளமும் வளர்தற்கு வாய்ப்பளிக்கும் மருத நிலத்து மாநகர்களிலேயே ஆகும். ஆகவே, அரண் அமைந்த அம்மாநகர்களே, அரண் கருதிய போர்களின் நிலைக்களமாய்க் காட்சி அளித்தன. நிற்க.

அரசனும், அவன் பெரும் படையும் அரணுள் புகுந்து கொள்வராயின், அவர் படையுள் ஒரு பிரிவினர், அரணிற்கு வெளியில் இருந்து கொண்டே அரணை முற்றியிருக்கும் பகைவர் படையினை அவ்வப்போது தாக்கியும், அப்படையால் தம் அரண் அழிந்து போகாதபடிக் காத்தும் நிற்பர். புறத்தான் அயர்ந்திருக்கும் சமயம் நோக்கி, அகத்தார் திடுமெனப் புறம் போந்து பகைவர் படையுள் ஒரு பகுதியைப் பாழ் செய்துவிட்டு மீண்டும் அரணுள் புகுந்து அடங்கிவிடுவதும் ஒரோ வழி நிகழும்.

அரணுட்புகுந்து அடங்கவிரையும் தம் அரசனையும் படையையும் பகைவர் படை பின்பற்றிச் சென்று அழிக்காதபடி அப்பகைவர் படையினைத் தடுத்து நிறுத்துதல் வேண்டுமாதலின், பாய்ந்து வரும் பகைவர் படையினை எதிர்த்து வீரர் சிலர் போரிடுவதும், அவருள் சிலர் உயிரிழப்பதும் உண்டு. அரணைச் சுற்றி அமைந்திருக்கும் மதிலுக்குப் பேரரண் புரிந்து நிற்பன அகழியும், அகழியைச் சூழ உள்ள காவற்காடுமாம். ஆகவே, அரண் அழியாமையை விரும்புவார், அவ்விரண்டினையும் அழிய விடாமல் காத்தல் வேண்டும். ஆகவே அரண் புறத்தே விடப்பட்ட அந்நாட்டுப் படையாளர் சிலர், காவற் காட்டினை அழித்தும், கிடங்கினைத் தூர்த்தும் அரண் அழிக்கும் பகைவர் படையினைப் பாழ் செய்வதும், அப்போரில் உயிர் துறப்பதும் உண்டு. காவற்காட்டையும், கிடங்கையும், அழிப்பதில் வெற்றி கண்ட பகைவர் படை, பின்னர், அரண் மதிலை அழிக்க முனையும். அப்போது, அரண் அகத்தே அடங்கியிருக்கும் படையாளர், அம் மதில் தலையில் இருந்தவாறே புறத்தாரோடு போரிட்டு அம்மதிலைக் காக்க முனைவர். அப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/20&oldid=1360720" இலிருந்து மீள்விக்கப்பட்டது