பக்கம்:கழுமலப்போர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

போரிலும் சிலர் உயிரிழந்து போவர். பகைவர் பெரும் படை கொண்டு பலகாலும் தாக்குவதால், மதிலின் ஒரு பகுதி அழிந்து போவதும், அதன் ஊடே, பகைவர் படை அரணுள் புகுதலும் உண்டு. அவ்வாறு நுழையும் அப்படையினை, அரணகத்துப் படையினைச் சேர்ந்த சிறந்த வீரர் ஒன்று கூடி உரங் கொண்டு தாக்கித் துரத்துவர். இவ்வாறு ஒருவன் அரணை வளைத்துக் கொள்வதும், வளைத்துக் கொள்ளப்பட்டவன் வளைத்துக் கொள்வோனை வென்று துரத்தி விட்டு அரணைக் காப்பாற்றிக் கொள்வதுமாகிய இப்போர் நிகழ்ச்சிகளை, உழிஞை எனப் பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார்.[1]

ஒருவனுக்கு மண் பொன் பெண் என்பனவற்றின் பால் எவ்வளவு ஆசை உண்டோ, அவ்வளவு ஆசை புகழின்பாலும் உண்டு. “தோன்றின் புகழொடு தோன்றுக” என்றார் வள்ளுவப் பெருந்தகையார். புகழ் பெரும் வழிகளாகக் கல்வி, செல்வம், கொடை எனப் பல உளவேனும், கொற்றத்தால் பெரும் புகழையே வெற்றி வீரர்கள் விரும்புவர். ஆகவே, பரந்த நாடும் சிறந்த செல்வமும், நிறைந்த இன்பமும் பெற்று, வாழும் பேரரசன் ஒருவன், தன் ஆண்மையை, ஆற்றலை அனைத்துலகமும் அறிய வேண்டும், அங்கெல்லாம் தன் வன்மையை நிலைநாட்டி வருதல் வேண்டும் என விரும்பி, வேற்று நாடுகள் மீது படையெடுத்துப் போவதும் உண்டு. அத்தகைய பேராற்றல் வாய்ந்த அவனுக்குரிய நாட்டிற்கு அண்மையில் உள்ள நாடுகள் எல்லாம் அவன் ஆட்சிக்கு உட்பட்டுக் கிடக்குமாதலின், அவன் தன் ஆற்றலை நிலைநாட்ட மிக மிகச் சேய்மைக்கண் உள்ள நாடுகளுக்கே செல்லுதல் வேண்டும். பெரும்


  1. “உழிஞை தானே மருதத்துப் புறனே.”
    “முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
    அனைநெறி மரபிற்று ஆகும் என்ப,”

    —தொல்: பொருள்: புறம்: 9, 10.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/21&oldid=1360723" இலிருந்து மீள்விக்கப்பட்டது