பக்கம்:கழுமலப்போர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இவ்வாறு ஆற்றல் காட்டவந்த அரசர்களையும் வென்று துரத்தவல்ல வேந்தர்களும் தமிழ்நாட்டில் இருந்தனர். அவ்வாறு துரத்துங்கால், வந்த வேந்தன், மரக்கலங்களை விட்டு, கடற்கரை மண்ணில் காலிட்டவுடனே. கடும் போர் இட்டு அடித்துத் துரத்துவதும் உண்டு. அவன் வருகையை முன் அறிந்து கொள்ள முடியாத வகையில், அவன் திடுமென வந்து விடுவதும் உண்டு. அதனால் அவன் தொடக்கத்தில் கடற்கரையையும், காட்டையும் கடந்து அகநாடுவரை வெற்றிக் கொடிகளை நாட்டி விடுவதும் உண்டு. அவன் வருகையை அந் நிலையில் அறிந்து கொள்ளும் இந்நாட்டரசன் அவன ஆங்கு மடக்கிப் போரிட்டு வெல்வதும், வெல்வதோடு அமையாது, அவன் கலம் ஏறிக் கடல் புகும் வரையில் துரத்திச் செல்வதும் உண்டு. இதனால் வந்தவனை வென்றழிக்கும் போர், பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே நடைபெறும். மேலும் வந்தவன், தன் ஆண்மையை நிலைநாட்ட வந்தவனாதலின், அவன்பால் பேராற்றலும் பெரும் படையும் இருக்கும், ஆகவே, அத்தகையானை வென்று துரத்தக் கடும் போரிட நேரிடும். அதற்கு மரங்கள் நிறைந்த காடோ, வயல்கள் நிறைந்த நாடோ, வாய்ப்புடைய இடமாகா. மணல் நிறைந்து பரந்து கிடக்கும் கடற்கரையே சாலவும் சிறந்த இடமாம். ஆகவே, அவனை வென்று அழிக்க விரும்பியவன், அவனை எவ்வாறேனும் அக்கடற்கரைக்குக் கொண்டு சென்றே போரிட்டு அழிப்பன். இவ்வாறு தன் ஆற்றலை நிலை நாட்டுவதையே முன்னிறுத்திப் போர் தொடுத்து வருவோனை வென்று துரத்தும் போரைத் தும்பைப் போர் எனப் பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார்.[1]


  1. “தும்பை தானே நெய்தலது புறனே”

    “மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
    சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப,”

    –தொல்: பொருள்1 புறம்: 14–15.

க, போ—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/23&oldid=1359312" இலிருந்து மீள்விக்கப்பட்டது