பக்கம்:கழுமலப்போர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

சேர்ந்த ஒரு யானை மதம் பட்டுவிட்டது. அதன் அழிவு வேலைகளால், அப்பாசறையே நடுங்கிவிட்டது; அதைப் பீடித்து அடக்கும் ஆற்றல் அங்கிருந்த வீரர் ஒருவர்க்கும் இல்லை. அதன் ஆரவாரம் கண்டு அஞ்சிய வீரர்கள் உறக்கத்தையும் மறந்து விட்டார்கள். அச்செய்தி கேட்டான் கணைக்கால் இரும்பொறை; விரைந்து பாசறைக்குச் சென்றான். அடங்காது அலைந்து திரிந்து கொண்டிருந்த அம்மத யானையை அடக்கிப் பிடித்து, அதன் கட்டுத் தறியில் பிணித்தான். பின்னரே வீரர்கள். உறங்கச் சென்றனர். யானையின் அழி செயல் கண்டு அஞ்சி, அலை ஒலிபோல் ஆரவாரம் செய்த அவர்கள் அமைதி உற்றனர். அலைஓசை அடங்கிய கடல் போல், கோட்டையிலும் அமைதி நிலவிற்று. அத்துணை அஞ்சாமையும், அதற்கேற்ற உடல் வன்மைபும் உடையவன் இரும்பொறை.[1]

இரும்பொறை காலத்தில், மூவன் என்ற பெயர் பூண்ட வீரன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவனும் இவனைப் போலவே கழிகளையும், கழனிகளையும் ஒருசேரக் கொண்ட வளம் மிக்க நாடுடையவனாய் விளங்கினான். அவன் நாட்டுக் கழிகளில், பகற்காலமெல்லாம் இரை தேர்ந்து உண்ணும் பறவைக் கூட்டம், இரவு வந்ததும், அவன் நாட்டு வயலோரங்களில் போட்டிருக்கும் நெற்போர்களில் சென்று தங்கும், நெய்தல் மணக்கும் நெல் வயல்களில் புகுந்து தொழில் புரியும் உழவர், உடல் தளர்ச்சி போக, மதுவை ஆம்பலின் அகன்ற இலையில் வார்த்து உண்டுவிட்டு, அம் மது மயக்கத்தால்,


  1. “கானல்அம் தொண்டிப் பொருநன்; வென்வேல்
    தெறல் அரும்தானைப் பொறையன்; பாசறை
    நெஞ்சம்நடுக்கு உறூஉம் துஞ்சா மறவர்
    திரைதபு கடலின் இனிது கண்படுப்பக்
    கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை.”

    –நற்றிணை: 18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/27&oldid=1359360" இலிருந்து மீள்விக்கப்பட்டது