பக்கம்:கழுமலப்போர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆங்கு வந்து ஒலிக்கும் கடலின் அலை ஓசைக்கு ஏற்ப அடியிட்டு ஆடுவர்.[1]

இத்தகைய வளம் மிக்க நாட்டைப் பெற்றுள்ளோம் என்ற செருக்குள்ளம் கொண்டு, மூவன், சேரனை மதிக்க மறுத்துவிட்டானோ, அல்லது மூவேந்தர் குடியில் வந்த தன்னைப்போலவே, குறுநிலத் தலைவனாகிய இவனும், வளமிக்க ஒரு நாட்டில் வேந்தனாய் வாழ்வதா எனப் பொறையன் உள்ளத்தில் பொறாமைத் தீ புகைந்து பற்றிக்கொண்டதோ, இருவர்க்கும் இடையே பகை வளர்ந்துவிட்டது. கணையன் படையோடு சென்று மூவனை வென்று அடக்கினான்; அவன் சினம் அம்மட்டோடு அடங்கவில்லை போலும்; அம்மூவன் பற்களைப் பெயர்த்தெடுத்து வந்து, தன் தலைநகராம் தொண்டிமாநகரின் தலைவாயிற் கதவில் வைத்து அழுத்தினான்.[2]

இவ்வாறு வெற்றி வீரனாய் விளங்கிய சேரமான், சிறந்த புலவனுமாவன். புறநானூற்றைப் பாடிய புலவர் வரிசையில் இடம் பெறத்தக்க பெரும் புலவனாய் வாழ்ந்திருந்தான். புலமையிற் சிறந்த பேரரசனாய் வாழ்ந்த அவன், பெரும் புலவர் ஒருவரைத் தன் ஆருயிர் நண்பராகப் பெற்ற பெருமையும் உடையவன். அவன் அவைக் களப் புலவராய்


  1. “பொய்கை நாரை போர்வில் சேக்கும்;
    நெய்தல் அம்கழனி நெல் அரி தொழுவர்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
    அகல் அடை அரியல் மாந்தித், தெண்கடல்
    படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!”

    –புறநானூறு: 209
  2. “மூவன், முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்
    கானலம் தொண்டிப் பொருநன்.”

    –நற்றிணை: 18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/28&oldid=1359457" இலிருந்து மீள்விக்கப்பட்டது