பக்கம்:கழுமலப்போர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பெருமானின் திருவுருவம் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதைத் தான் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாய், ஒரு வெள்ளை யானை பார்த்தது. அன்று முதல், தன் துதிக்கையால் தூயநீர் கொண்டுவந்து அத்திருமேனியை ஆட்டியும், மணம் வீசும் மலர்க் கொத்துக்களைக் கொணர்ந்து அப்பெருமானுக்குச் சூட்டியும் வழிபடத் தொடங்கிற்று. அதனால், அக் காடும் அன்றுமுதல் திருவானைக்கா எனப் பெயர் பெற்றது. இது நிற்க.

இறைவன் வீற்றிருக்கும் அவ்வெண்நாவல் மரத்தில் சிலந்தி ஒன்றும் வாழ்ந்திருந்தது அது சிவன் திருமுடியில், யானை சூட்டிய மலர்களையும், மரம் செடிகளின் இலைகளையும் பார்த்தது. யானை அன்பால் சூட்டியன அவை என்பதை அது அறியாது. காற்றால் அலைப்புண்டு உதிர்ந்த காட்டுச் சருகுகள் என்றே அவற்றைக் கருதிற்று. இறைவன் திருமுடியில் சருகுகள் உதிர்வதைக் கண்டு, அதன் அன்புள்ளம் கலங்கிற்று. உடனே, அவ்விறைவன் திருமுடிக்கு மேலே, தன் வாய் நாலால் வலை பின்னி, விதானம் அமைத்தது.

மறு நாள், வழக்கம்போல் வழிபாடாற்ற வந்த வெள்ளை யானை, அச்சிலந்தி வலையைப் பார்த்தது. இறைவன் திருமுடிமேல் எச்சில் நூலால் வலை இயற்றி இருப்பது தூய்மைக் குறைபாடாம் என்று கருதித் தன் துதிக்கையால் அவ்வலையை அழித்து விட்டு, வழிபாட்டையும் முடித்துக்கொண்டு போய் விட்டது. அதன் பின்னர் ஆங்கு வந்த சிலந்தி வலை அழிந்து போயிருப்பதைப் பார்த்து வருந்திற்று. ஆயினும் அது. அழிந்தது எவ்வாறு என்பதை அறியாதே, மீண்டும் வலை பின்னி வைத்துச் சென்றது.

இவ்வாறு, சிலந்தி வலை பின்னுவதும், யானை அவ்வலையை அழித்து இறைவன் திருமுடியில் காட்டு மலர்களையும் இலைகளையும் இட்டுச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், சிலந்திதான் வலை பின்னுகிறது; அது அதன் அன்பின் அறிகுறி என்பதை யானை அறியாது; யானை தான் வலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/31&oldid=1359475" இலிருந்து மீள்விக்கப்பட்டது