பக்கம்:கழுமலப்போர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அறுத்துவிட்டுக் காட்டுச் சருகுகளை இட்டுச் செல்கிறது; அது அதன் வழிபாட்டின் விளைவு என்பதைச் சிலந்தி அறியாது. ஒரு நாள் யானை வழிபாடாற்ற வருங்கால், ஆங்கிருந்த சிலந்தி உண்மையை அறிந்து கொண்டது. சிலந்திக்கு அடங்காச் சினம் பிறந்துவிட்டது; இத்தனை நாட்களாக, இதைச் செய்து வந்தது இந்த யானைதானோ? இனியும் இதை உயிரோடு விட்டு வைப்பது கூடாது என்று துணிந்தது. உடனே மரத்தை விட்டு இறங்கி, யானைத் துதிக்கையின் துளையுட் புகுந்து சென்று கடித்துவிட்டது. அது பொறுக்கமாட்டாத யானை, துன்பத்தால் துடித்து வீழ்ந்து இறந்தது. வீழ்ந்த யானை துன்ப மிகுதியால், தன் துதிக்கையைத் தரையில் ஓங்கி ஓங்கி அறைந்ததால், அதன் உட்புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது.

ஈருயிர்களின் இறவாப் பேரன்பைக் கண்ட இறைவன், வெள்ளானைக்கு வேண்டும் வரங்களை வழங்கிவிட்டுச், சிலந்திக்குச் சோழர் குலத்தில் பிறந்து, பேரரசு செலுத்தும் பெரு வாழ்வை அளித்தான்.

இஃது இவ்வாறாகச், சோணாட்டில், சுபதேவன் என்பான் அரசோச்சியிருந்தான். அவனும், அவன் மனைவி கமலவதி என்பவளும், தில்லையில் திருக்கூத்தாடும் இறைவன்பால் குறையா அன்புடையராவர். அவர்கள் தமக்கு மகப்பேறில்லா மாசினைப் போக்குமாறு, அம்மன்றாடியை மன்றாடி வேண்டிக்கொண்டனர். அவன் திருவருளால் கமலவதி இறுதியில் கருவுற்றாள். அவள் வயிற்றில் மகவாய்ப் பிறக்குமாறு சிலந்தியின் ஆருயிர்க்கு அப்பரமன் ஆணையிட்டான். அவ்வாறே, சிலந்தி, சோழர் குல மாதேவியின் வயிற்றில் மகவாய் வந்து தோன்றிற்று.

கருப்ப நாள் நிரம்ப மகப்பெறும் நாழிகையும் நெருங்கி விட்டது. அக்காலை, காலத்தின் பயனறியும் கணக்காளர், பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேல் பேரரசனாய்ப் பெருமை பெறுவான் என்றனர். அது கேட்ட அத்தாய், தன் மகன் தன்னேரில்லாத் தனியரசு செலுத்த வேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/32&oldid=1359479" இலிருந்து மீள்விக்கப்பட்டது