பக்கம்:கழுமலப்போர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

தணியா வேட்கை உடையவளாய், தன் உயிர் போவதையும் பொருட்படுத்தாது, பிள்ளைப் பேற்றினை ஒரு நாழிகை கழித்துப் போட்டு மகவீன்று, அம்மகிழ்ச்சி நிறை மனத்தோடே மறைந்து விட்டாள்.

பிறந்த செல்வனுக்குச், சுபதேவன், செங்கண்ணான் எனச் சிறப்புப் பெயரிட்டுச் சீராட்டி வளர்த்தான். கற்கவேண்டிய கலைகளை யெல்லாம் கற்றுக் காளைப் பருவம் பெற்றான், கோச்செங்கணான். சுபதேவன், நாடாள் உரிமையை அவன்பால் ஒப்படைத்துவிட்டுக் காடு சென்று, கடுந்தவம் பல புரிந்து இறுதியில் கண்ணுதலான் கழலடி சேர்ந்தான்.

கோச்செங்கணான், அரியணை அமர்ந்து, தன் கொற்றமும் வெற்றியும் விளங்க ஆட்சி புரிந்து வந்தான். நாடு நலம் பெற்றுவிட்டது; இனி அதற்கு நலிவு இல்லை என்ற நிலை பெற்றுவிட்டதும், தன் கருத்தை இறைவன் திருப்பணியில் போக்கினான்; சோணாட்டில் இறைவன் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளானோ அங்கெல்லாம் திருக்கோயில் அமைக்கும் அரிய தொண்டினை மேற்கொண்டான். தன் பழம் பிறப்பின் பெருமையை அறிந்து கொண்டமையால், அத்திருவானைக்காப் பெருமானுக்குக் கோயில் எடுத்தும், அக்கோயில் உள்ளே வெண்ணாவல் வளர்த்தும் வழிபாடாற்றினான் அரசன் கருத்தறிந்த அவன் அமைச்சர்களும், சோணாடு முழுவதும், சிவன் கோயில்களை அமைத்து, அவற்றில் குறைவற நிகழ வேண்டிய வழிபாட்டிற்கு வேண்டிய அமுதுபடி முதலான நிபந்தங்களையும் உண்டாக்கி வைத்தனர்.

இறைவனுக்குத் திருக்கோயில் அமைக்கும் அரிய பணி மேற்கொண்ட கோச்செங்கணான், அப்பணி குறைவற நிறைவேறிய பின்னர், இறைவன் உறையும் பெரிய கோயிலாகிய தில்லை மாநகர் சென்று சேர்ந்தான்; ஆங்கு ஆடும் பெருமானை அன்புருக வழிபட்டிருந்த வேந்தன், அக்கோயிவில் வழிபாடு செய்யும் அந்தணர்க்கு வாழிடம் நன்கு வாய்க்காமை கண்டு, அவர்க்கெனப் பெரிய மாளிகைகள் பல அமைத்துத் தந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/33&oldid=1359492" இலிருந்து மீள்விக்கப்பட்டது