பக்கம்:கழுமலப்போர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நாட்டு மல்வீரன் இருப்பதாகவும், அவனைப் பேணிப் புரக்கும் அக்கணையன், ‘தன் மல்வீரனை எவராலும் வெல்ல முடியாது’ என வீம்பு பேசித் திரிவதாகவும் அறிந்தான். அவனுக்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. தன் உடன் வரும் பாணனைக் கொண்டு அவ்வாரிய மல்லனை வென்றுவிட்டால், அவன் நண்பனாகிய கணையனுக்கு, இப்பாணன் நண்பனாகிய இக்கட்டிமீது மதிப்பு ஏற்படும்; அதை வைத்துக் கொண்டு அவன் படைத்துணை பெற்று, தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான். தன் மற்போர்த் திறத்தை விளக்கமுறச் செய்யவேண்டும் என்ற பாணன் வேட்கையும் அதனால் நிறைவேறும் என்று நினைத்தான்.

உடனே கட்டியும், பாணனும் கழுமல நகர் புகுந்து கணையனைக் கண்டனர். கட்டி தன் நண்பன் பாணனின் மற்போர்ப் பெருமையைப் பாராட்டினான். கணையன் தன் நண்பன் ஆரியப் பொருநனின், அரிய திறத்தை அவனுக்குக் கூறினான். இருவரும், இவ்வாறு வீணே புகழ்ந்து கொள்வதைக் காட்டிலும், எவர் ஆற்றல் சிறந்தது என்பதை நேரில் பார்த்து அறிந்துகொள்வதே நன்று என்ற முடிவுக்கு வந்தனர். உடனே இருவரும் தம் நண்பர்களோடு மற்போர்க் களம் புகுந்தனர்.

பாணனும், ஆரியப் பொருநனும் மேடை புகுந்தனர். போர் தொடங்கிவிட்டது. கட்டியும் கணையனும், கண் இமையாது, கவலையோடு கண்டு நின்றனர். போர் நெடும் பொழுது நடைபெற்றது. இறுதியில் பாணன், ஆரியப் பொருநன் தோள்களைத் தன் மார்போடு தழுவி இறுகப் பிடித்துக்கொண்டான். பாணன் பிடித்திருக்கும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, பொருநன் தன் ஆற்றல் முழுவதையும் காட்டிச் சமர் புரிந்தான். ஆனால், பற்றிய பிடியினைப் பாணன் விட்டிலன். அதனால், பாணன் பிடிக்குள்ளேயே பொருநன் தோள் இரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/42&oldid=1359811" இலிருந்து மீள்விக்கப்பட்டது