பக்கம்:கழுமலப்போர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


4. போர் நிகழ்ச்சி

சேரமான் கணைக்கால் இரும்பொறை, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முகலாய படைத் தலைவர்களோடு கழுமல நகர்க்கோட்டையில் காத்திருந்தான். அக்கால அரசியல் சூழ்நிலையும் அவனுக்கு ஏற்றதாகவே அமைந்திருந்தது. அதுவே சோழன் செங்கணான் அவன் மீது போர் தொடுக்கக் காரணமும் ஆயிற்று.

சேர நாட்டிற்குக் கிழக்கிலும், சோணாட்டிற்கு மேற்கிலும், பாண்டி நாட்டிற்கு வடமேற்கிலும், அதாவது இம்மூன்று நாட்டு எல்லைகளும் ஒன்றுசேரும் இடத்தில், சிறுநிலப்பகுதியைத் தம் உடமையாகக் கொண்டு கொங்கர் என்ற இனத்தவர் வாழ்ந்திருந்தனர். சேர, சோழ, பாண்டியர்களைப் போலவே அவர்களும் மறவர் மரபில் வந்தவராவர். அவர்கள் ஆனிரை ஓம்பும் தொழில் மேற்கொண்டிருந்தனர். கோவை மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தின் தென்பகுதியையும் கொண்டு, கொங்கு நாடு என அழைக்கப்பெற்ற அக்கொங்கர் வாழ் நாடு, நீர்வளம் அற்ற வன்னிலமே வாய்ந்த மேட்டு நிலமாம். அதனால், கொங்கர், தம் ஆனிரைகளுக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஆங்காங்கே எண்ணிலாக் கிணறுகளைத் தோண்டி வைத்திருந்தனர். ஆனிரைகளை எத்திசையில் கொண்டு செல்ல விரும்புகின்றனரோ, அத்திசையில் கொங்கர் சிலர், ஆனிரை செல்வதற்கு முன்பாகவே சென்று, கணிச்சி போன்ற கல் உடைக்கும் கருவிகளின் துணைகொண்டு, கற்களைத் தீப்பொறி சிதறுமாறு உடைத்து, சிறிது சிறிதாக அகழ்ந்து, ஆழ்ந்த என்று கிணறுகளைத் தோண்டி வைப்பர். அக்கிணறுகளும், மேல் நீரும் மிக்க நீரும் உடையலாகாமல், ஆழ் நீரும், அற்று அற்றுக் கசியும் குறை நீருமே உடையவாகும். அந்நீரை நீண்ட கயிறு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/46&oldid=1377019" இலிருந்து மீள்விக்கப்பட்டது