பக்கம்:கழுமலப்போர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

இவ்வாறு கொங்கரை வென்று அடக்குதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செங்கணான் செய்துகொண்டிருக்க, சேரன் கணைக்கால் இரும்பொறை, அக்கொங்கரைத் தன் படைத் துணைவராகக் கொண்டான். இச்செயல் செங்கணான் சினத்தை அதிகப்படுத்தி விட்டது. உடனே கழுமல நகர் நோக்கிச் சோழர் படை புறப்பட்டுவிட்டது. பழையன், சோழர் படைக்குத் தலைமை பூண்டதோடு, அவனுடைய வேழப் படையும், வேற் படையும், சோழர் படைக்குத் துணைப்படையாய் வந்தன.

கழுமல நகரை அடுத்திருந்த திருப்போர்ப்புறம் என்ற இடத்தில், இருதிறப் படைகளும் எதிர்த்துப் போரிட்டன. சோழர் படையில் பழையன் ஒருவனே களம் புகுந்தான். ஆனால், சேரர் படைடயிலோ, படைத்தலைவர் அறுவருமே பங்கு கொண்டனர். பழையன் வேழப்படையும், வேற்படையும் வீறுகொண்டு போரிட்டன. சேரர் படைக்குப் பெருஞ்சேதம் விளைந்தது. கொங்குப்படை அறவே அழிவுண்டது. களம் எங்கும் பிண மலைகளே காட்சி அளித்தன. பிணம் தின்ன வந்து பறக்கும் பருந்துக் கூட்டத்தின் மிகுதியால், களம் முழுதும் நிழல் படர்ந்தது. சேரர் படைவீரர் அறுவரையும் தனித் தனியே தாக்கிப் போரிட்டுத் திரிந்தான் பழையன். நன்னன் நிலை குலைந்து வீழ்ந்து இறந்தான். ஏற்றை எதிர்நிற்கமாட்டாது இறந்து ஒழிந்தான். அணி பல பூண்டு அமர்க்களம் புகுந்த அழகனாகிய அத்தியும் அழிந்தான். நிகர் அற்றவன், அணுகி நின்று போரிட எவரும் அஞ்சத்தக்க ஆற்றல் உடையவன் எனப் பாராட்டப் பெற்ற கங்கனும் களத்தில் மாண்டான். வடநாடு விட்டுத் தென்னாட்டு அரசியல் வாழ்வை விரும்பி வந்த கட்டியும், வெட்டுண்டு வீழ்ந்தான். வில்வீரனாகிய புன்றுறையும் பொன்றினான்.

படைத் தலைவர் அறுவரும் இறந்துபடவே, சேரர் படை செய்வதறியாது சிதறி ஓடிற்று. பழையன், ஓடும் படைகளை விடாது துரத்திச் சென்று கழுமலக் கோட்டையைப் பாழ்படுத்துவதில் முனைந்தான்; படைத்தலைவர் போர்க்களம் புகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/49&oldid=1359873" இலிருந்து மீள்விக்கப்பட்டது