பக்கம்:கழுமலப்போர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திண்மை கண்டு திகைப்புறது முன்சென்று தாக்கினர். தேர்ப்படை அழிந்தது. தேர்ப்படை அழிவுகண்டும் வீரர்களின் உள்ளம் அமைதியுற்றிலது. அப்படைக்கு அழகளிக்கும் குடைகள்மீது அவர் சினம் சென்றது. குடைகளையும் கொடிகளையும் வெட்டித் துண்டாக்கி வெற்றி நகை நகைத்தனர். நிற்க.

முன் நின்ற தேர்ப்படை அழியவே, அதன் பின்னின்ற களிற்றுப்படை களம் நோக்கி விரைந்தது. வரிகளின் வனப்பு விளங்கும் நெற்றி, ஆடி அசையும் பருவுடல், தொங்கும் துதிக்கை ஆகியன சிறப்பளிக்க, வரிசைவரிசையாக முன்னேறி வந்தது வேழப்படை. தேர்ப்படைப் போரில் சற்றே தளர்ந்திருந்தும், வாள் வீரர், யானைப் படையின் வரவு கண்டு உளம் நடுங்கினாரல்லர். மாறாக, மேலும் ஊக்கம் கொண்டனர். அவை தொலையில் வருங்கால், அசைநடை யிட்டுவரும் அழகைக் கண்டுகளித்தனர்; அது சிறிது பொழுதே; அவை தம்மை நோக்கி விரைந்து முன்னேற முன்னேற, அவர் களிப்பு மாறக், கடுஞ்சினம் கொண்டனர். வந்த யானைப் படை வாள்வீரரைத் தம் வலம் கொண்டு தாக்கின. அதனால் அவர்களும் சிறிதே தளர்ந்தனர். ஆனால், பின்னிட்டாரல்லர். கை வாள்கள் அவர் வீரத்தை ஊக்கின. அதனால் ஓடாது உறுத்து நோக்கினர். அவற்றிற்கு ஆற்றல் அளிப்பன அவற்றின் துதிக்கைகளே என்பதைக் கண்டுகொண்டனர். உடனே தம் வாள்களை ஓச்சி, துதிக்கைகட்குக் குறிவைத்தனர். அவ்வளவே, தொங்கும் அக்கைகள் அற்று வீழ்ந்தன. அவ்வாறு வீழ்ந்த துதிக்கைகளுள் ஒன்று, ஆங்கு அதற்கு முன்பே அழிந்த, தேர்ப் படையின் சிதைந்த வெண் கொற்றக் குடையில் ஒரு பாதியும், மண்ணில் ஒரு பாதியுமாக வீழ்ந்தது.

முன்னணிப் படைகள் இரண்டின் முறிவு கண்டு, களத்தைக் காண முகம் சுளித்த மக்கள், வெண்கொற்றக் குடையில் வெட்டுண்ட துதிக்கை வீழ்ந்துகிடக்கும் காட்சி, வெண்மதியை வாயிற் கௌவிக்கிடக்கும் கரும் பாம்புக் காட்சி போல் தோன்றக்கண்டு, களக்கொடுமையைச் சிறிதே மறந்து களிப்புற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/52&oldid=1359919" இலிருந்து மீள்விக்கப்பட்டது