பக்கம்:கழுமலப்போர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வாணிகம் புரிய வருவார்முன், வகைவகையான பவளங்களை இட்டுக் கட்டி வைத்திருக்கும், நீண்ட பையைக் கட்டவிழ்த்துத் தூக்கிக் கொட்ட, அப்பையினின்றும் செந்நிறப் பவளங்கள் சரசரவெனச் சொரியும் காட்சியைக் கண்முன் கொணர்ந்து காட்ட, களக்கொடுமை மறந்து சிறிதே களிப்பில் ஆழ்ந்தனர்.

“கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்
பவளம் சொரிதரு பைபோல்—திவள் ஒளிய
ஒண்செங்குருதி உமிழும், புனல்நாடன்

கொங்கரை அட்ட களத்து”
—களவழி : 14

குளத்து மதகில் குருதி வெள்ளம் :

போர் தொடங்கிவிட்டது. போர் தொடங்கிவிட்டது என்பதைத் தெரிவிக்கவும், படை வீரர்க்கு ஊக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாக்கவும் முரசு முழங்கிற்று. முரசொலி உரம் ஊட்ட வீரர்கள் வெறிகொண்டு வெஞ்சமர் புரியத்தொடங்கினர். வீரர்களின் ஆற்றலும் ஆண்மையும் கண்டு அஞ்சிய பகைவர்கள், அவர்க்கு உரம் ஊட்டுவது, முரசொலியே என உணர்ந்து, அதைப் பாழாக்க முனைந்தனர். போரில் தம் வெற்றிக்குப் பெருந்துணை புரிவது முரசொலியே என உணர்ந்த வீரர்களும், முரசினைச் சூழ்ந்து காத்து நின்றனர். அதனால் முரசழிக்கும் போரில் பலர் உயிரிழந்தனர். பல உயிர் இழந்தும், பலரை உயிரிழக்கப் பண்ணியும், பகை வீரர் இறுதியில், முரசினை அழித்தனர்; அதன் தோலைக் கிழித்தனர். இடிபோல் ஒலித்துத் தம் படை வீரர்க்கு ஆண்மையும், பகைப்படை வீரர்க்கு அச்சமும் ஊட்டிய முரசு அழிந்தது. தோல் கிழிந்து தொழில் இழந்துபோன முரசினைக் காப்பதில் இனிப் பயனில்லை எனக் கருதி, அதற்குரியார், அதைக் களத்தே கைவிட்டுச் சென்றனர். கைவிடப்பட்ட முரசு, களத்தின் ஒருபால் உருண்டு கிடந்தது.

முரசழிவைக் காணக் காண, வீரர்க்கு ஆத்திரம் அதிகமாயிற்று. ஆற்றலெல்லாம் காட்டி அமர் செய்யத் தலைப்பட்டனர். கடும் போர் புரிந்து களத்தைப் பாழாக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/56&oldid=1359971" இலிருந்து மீள்விக்கப்பட்டது