பக்கம்:கழுமலப்போர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சோணாட்டு வாட்படைக்கே வலியிழந்து போன சேர நாட்டு வேழப்படை, வில்வீரர்களும் வேல் வீரர்களும் கூடிச் செய்யும் தாக்குதலைத் தாங்க மாட்டாது தளர்ந்தது. உடலெல்லாம் அம்புகள் தைக்க, மார்பிலும் நுதலிலும் வேல்கள் ஊடுருவ, வேழங்கள் நிற்கவும் மாட்டாது சோர்வுற்றன; தளர்ந்து தள்ளாடி, வரிசை வரிசையாக முகம் கவிழ்ந்து மண்ணில் சாய்ந்தன. அவை மண்ணில் சாயவே, அவற்றின் கோடுகள், குருதி தேங்கும் களத்து மண்ணில் ஆழப்புதைந்து கொண்டன.

நிலை குலையா மலைகளென நின்று காட்சி தரும் களிறுகள், வலியிழந்து, வெண்கோடுகள் மண்ணுள் புதைந்து மறைய முகங்கவிழ்ந்து சாய்ந்து கிடக்கும் காட்சி, காண்பவர் கருத்தைக் கலக்கும் கொடுமையுடையதேனும், கீழே குருதிநீர் தேங்க, அதனிடையே களிறுகள் கவிழ்ந்து கிடக்கும் அக்காட்சி, களிறுநிகர் காளைகள், வெள்ளியால் புனையப்பெற வெண்ணிறக் கலப்பைகளை ஈர்த்து, தண்ணீரால் ஈரம்பட்ட, செந்நிலத்தை உழும் காட்சிபோல் தோன்றிக் களக் கொடுமையைச் சிறிதே மறைத்துக் காட்டிற்று.

“வெள்ளி வெண்ணாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்
எல்லாக்களிறும் நிலம் சேர்ந்த—பல்வேல்
பணைமுழங்கு போர்த்தானைச் செங்கண் சினமால்
கணைமாரி பெய்த களத்து.” —களவழி: 40

குருதிப்புனலுள் களிற்றுடம்பு :

கணைக்காலிரும் பொறையின் களிற்றுப் படையைச் செங்கணான் வெற்றி கொண்டான். ஆனால், அவ்வெற்றி எளிதில் வாய்த்துவிடவில்லை. களம்பல கண்டு, நாடு பல வென்று, வேந்தர் பலரின் வீறுகளை அழித்துப் புகழ் மாலை சூடிய அவன் வேற்படை களம் புகுந்த பின்னரே வெற்றித் திருமகள், தன் அருள் நோக்கை அவன்பால் திருப்பினாள். களம் புகுந்த அவ் வீரர்களும், புகுந்தவுடனே வெற்றி கண்டாரல்லர். வேழப் படையுடன் நெடும்பொழுது வெஞ்சமர் புரிந்தனர். வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/60&oldid=1360012" இலிருந்து மீள்விக்கப்பட்டது