பக்கம்:கழுமலப்போர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வாய்ப்பதாகத் தோன்றவில்லை. களிறுகள் முன், கால் கடுக்க நின்றும், கால் வலிக்க விரைந்து ஓடியும் போரிடின், பல நாளாயினும் போர் முடிவுறாது. களிறுகள் எட்டாவுயரத்தில், அவை விரைந்து துரத்தினும் அவற்றால் பற்றப் பெறாது, பின்னோக்கியும் முன்னோக்கியும் விரைந்தோடவல்ல தேர்மீது இருந்து போரிட்டாலல்லது அவற்றைப் புறங்காண்டல் இயலாது என உணர்ந்தனர். உடனே, வேற்படைக்குத் துணையாகத் தேர்ப்படை களம் புகுந்தது. களிறுகள் பல கூடிப் பலமுறை தாக்கினும் தகர்ந்து அழிவுறாத் திண்மை வாய்ந்த தேர்கள் எண்ணிலாதன வேல் வீரர்களை ஏற்றிக் கொண்டு வேழப்படை நோக்கி விரைந்தன. வன்மையிற் சிறந்த வேல்வீரர்கள், தேர்மீதிருந்தவாறே, தம் கைவேலை உரங்கொண்டளவும் ஓங்கி, வேழங்களின் முகம் நோக்கி எறிந்தனர். வேல்களும், குறி பிழையாமல் விரைந்து, வேழங்களின் நுதலில் பாய்ந்து, அவற்றைப் பிளந்து புண்ணாக்கின. அக்கணமே, களிறுகள், உயிரிழந்து வீழ்ந்தன. ஆனால், வீழ்ந்த களிற்றின் உடல்கள், களத்து மண் மீது வீழ்ந்தில், களிற்றுப்போர் முடிவுறுதற்கு முன்பே களம் குருதி வெள்ளத்தில் ஆழ்ந்து மறைவுற்றிருந்தது. போரில் உயிரிழந்து வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் உடல்களினின்றும் பெருகிய செந்நீர், களமெங்கும் நிறைந்து தேங்கிக் கிடந்தது. அதனால் களிற்றின் உடல்கள், களத்து மண்ணில் வீழாமல், குருதி வெள்ளத்தில் வீழ்ந்து மிதந்தன.

களமெங்கும் செக்கச் செவேலெனப் பரந்த, செந்நீர் வெள்ளத்தின் இடையிடையே களிறுகளின் கரு நிறப் பருவுடல் மிதக்கும் அக்காட்சி, அந்திக் காலத்துச் செவ்வானின் இடையிடையே, நீர்க்கொண்ட கருமுகில்கள் காட்சியளிக்கும் கவின் மிகு காட்சியைக் காட்டிக் களிப்பூட்டிற்று.

“எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து
நெய்த்தோர்ப் புனலுள் நிவந்த களிற்றுடம்பு
செக்கர்கொள் வானில் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேல் தானைக் கொடித்திண்தேர்ச் செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.” —களவழி: 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/61&oldid=1360406" இலிருந்து மீள்விக்கப்பட்டது