பக்கம்:கழுமலப்போர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

குதிரை உதைத்த குடை :

கழுமல நகர்க்கோட்டை, பகைவர்க்குப் பாதுகாப்பளிக்கும் காவற்கூடமாய் இருக்கும்வரை, சோணாடு, வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரிப் பாய்ச்சலால், வளங்கொழிக்கினும் அமைதி நிலவும் நல்வாழ்வைப் பெறாது என உணர்ந்தான் செங்கணான். அதனால் அவ்வரணை அழித்தல் வேண்டும். அதனுள் படைகொண்டிருக்கும் பகையரசர்களைப் பாழ்செய்தல் வேண்டும் எனத் துணிந்தான். அவன் உள்ளத்தில் அத்துணிவே தலை தூக்கி நின்றமையால், நாற்படையால் நிறைவுற்ற சோணாட்டுப் படையின் சீரழிவு குறித்து அவன் சிந்தித்தானல்லன். தன் படையனைத்தையும் கழுமல நகர்க் களத்திற்குக் கொண்டு சென்றான்.

சோணாட்டுப் படைத் தலைவன் செருக்குமிக்குச் சமர் புரிந்தான்; அவன் படை ஆற்றல் மிக்கு அமர்புரிந்தது. அதனால், பகைவர் பலர் கூடி நின்று எதிர்த்தும், இறுதியில் அழிவுற்றனர்; அவர்களைக் காத்து நின்ற கழுமலக் கோட்டை அழிவுற்றுப் பகைவன் கைப்பட்டது. சேரநாட்டுத் தேர்ப் படை சிதைவுற்றது, உருள் ஒருபால், குடை ஒருபால், கொடி ஒருபாலாகக் கவிழ்ந்து உருக்குலைந்தது. பகைவர்க்குப் பெருமையளித்த அவர் தேர்ப்படை பாழான பின்னரும், சோணாட்டுப் படை சோர்வுற்றிலது. பகைவர் அழிவைக் காணக் காண, அது மேலும் உரங்கொண்டு அமர் புரிந்தது. சோணாட்டுப் படை வரிசையில், குதிரைப்படை சிறந்து விளங்கிற்று. காற்றெனக் கடுகிப் பாயும் அக்குதிரைகள், பகைவரின் தேர்ப்படை அழிந்து பாழுற்ற களத்தைத் தாண்டிச் சென்று சமர்புரியத் துடித்தன; அவை அவ்வாறு பாய்ந்தோடுங்கால், ஆங்கு ஒடிந்து வீழ்ந்து கிடக்கும் பகை வேந்தர்களின் வெண்கொற்றக் குடைகள், அக்குதிரைகளின் கால்களால் இடருண்டு, தலைகீழாக உருண்டோடி வீழ்ந்தன. தன் படையின் முன் வரிசைக்கண் தேர் மீதமர்ந்து, அக்களக் காட்சியைக் கண்ணுற்றிருந்த செங்கணான், குதிரைகளின் கால்பட்டுக் குடைகள் தலைகீழாகப் புரண்டுவிழும் அக்காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/62&oldid=1360411" இலிருந்து மீள்விக்கப்பட்டது