பக்கம்:கழுமலப்போர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

அறிந்து கொண்டதும், கொங்கு நாட்டார் தம் போர் முறையை மாற்றிக் கொண்டனர். சென்று தாக்குவதைக் கைவிட்டு நின்று தாக்க முனைந்தனர். சோணாட்டு வீரர்களின் வாட்படையை வலியிழக்கப் பண்ணுவதில் கருத்தினைச் செலுத்தினர். அதனால் அவர் வாள் வீச்சிகளாத் தளராது தாங்கி நிற்கும் வண்ணம் துணைபுரியவல்ல பெரிய கேடயங்களைக் கையில் ஏந்திக் களம் புகுந்தனர். அதனால் வென்று துரத்துவதல்லது தோற்று ஓடுவதை அறியாத சோணாட்டு வாள்வீரர், பிறகளங்களில் எளிதில் வெற்றி கண்டதுபோல், கழுமலக் களத்தில் வெற்றிகாண மாட்டாது கலங்கினார். அதனால் கடுஞ்சினம் கொண்டனர். போர்வெறி தலைக்கேறியது. களம் பல கண்டு வாகை சூடிய வாள்களைத் தேர்ந்தெடுத்து, கைக் கொண்டு களம் புகுந்தனர். சோணாட்டார் முன்னேறித் தாக்கினர். சேரநாட்டார் எதிர்நின்று தாங்கினர். வெற்றி தோல்வி காணமாட்டாத போர் நெடும் பொழுது நிகழ்ந்தது. இறுதியில் தம் வாட்படை வலியிழந்து வீணாவது, பகைவீரர் பற்றி நிற்கும் கேடகத்தால் என்பதை சோணாட்டு வாள் வீரர் உணர்ந்துகொண்டனர். உடனே அவர் நோக்கம் அது ஏந்திய இடது கையில் சென்றது. குறிபார்த்து, அவ்விடது கைகளை வெட்டி வீழ்த்தினர். சேர நாட்டு வீரர் இடக்கைகளை இழந்தனர். ஆனால், அந்நிலையிலும் அவர் ஆற்றல் குன்றவில்லை, கைகள் அற்று வீழ்ந்தனவேனும் அவை தாம் பற்றிய கேடகங்களை, அப்போதும் நழுவவிட்டில. அவற்றை இறுகப் பற்றியவாறே இற்று வீழ்ந்தன.

போர் ஒருவாறு ஓய்ந்தது. போர் ஆரவாரம் அடங்கிற்று. களத்தில் வீழ்ந்து கிடக்கும் பிணங்களினின்றும் எழுந்த நாற்றம் நால்வேறு திசையிலும் சென்று வீசிற்று. அந்நாற்றத்தை நுகர்ந்த நரிக் கூட்டம் நல்ல விருந்து கிடைத்தது எனும் நினைவால், நாக்கில் நீர் ஊறக் களத்தை அடைந்தன. அந்தரிகளுள் ஒன்று, கேடகத்தைப் பிடித்த பிடிதளராமல் அறுந்து வீழ்ந்து கிடக்கும் கையை வாயில் கௌவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/65&oldid=1360423" இலிருந்து மீள்விக்கப்பட்டது