பக்கம்:கழுமலப்போர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

துளைத்த பின்னரே, வீரர்கள் வீழ்ந்து மடிந்தனர். வாள் ஒரு முறை பட்டதும், உயிரிழந்து வீழ்ந்துவிட, அவ்வீரர்கள், ஆற்றல் இழந்தவரல்லரே!

வீழ்ந்த வீரர் உடல்களில் வாள்பட்டு உண்டான விழுப் புண்களினின்றும், குருதி, குபுகுபுவென வெளிப்பட்டு, ஆறு எனப் பெருக்கெடுத்தோடிற்று. குருதி வெள்ளத்தால், போர்க்களம், செங்களமாய் மாறிக் காட்சி அளித்தது. இவ்வளவும் ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது. அவனும் தோன்றிவிட்டான். இருள் அகல, ஒளி பரவிற்று செங்களக் காட்சிக்கும், ஞாயிறு தோன்றும் செவ்வானத்திற்கும் வேற்றுமையே தோன்றவில்லை. அத்துணைச் சிவந்திருந்தது போர்க்களம்.

பொழுது புலரக் கள நிலைகண்டனர் காவலர் இருவரும்; கண்டும் அவர் போர் வெறி தணியவில்லை. வாள் வீரர் வலியிழந்து போகவே, தத்தம் களிற்றுப் படைகளைக் களம் நோக்கி விட்டனர். களம் புகுந்த களிறுகள், எதிர் வரும் எப்பொருளையும் அழித்து மதம் கொண்டு திரிந்தன, கீழே குருதி வெள்ளம்; போர் வெறியால் அதையும் பொருட்படுத்தவில்லை. களம், களிறும் தேரும் கடுக ஓடுமாறு உரம் வாய்ந்த வன்னிலமே ஆயினும், குருதி, வெள்ளம் போல் பாய்வதாலும், அவ்வெள்ளத்திலும் விரைந்து பாய்ந்து போர் புரியும் களிறுகளின் கூட்ட மிகுதியாலும், அவ்வன்னிலமும் சேறுபடத் தொடங்கிவிட்டது. அந்நிலத்தைச் சேறாக்கவுதவிய நீர், செந்நீராதலின், பட்ட சேறு, செஞ்சாந்துக் குழம்பெனச் சிவந்து காட்டிற்று.

காலையில் சேறுபடத் தொடங்கிய களம், ஞாயிறு உச்சிப் பொழுதை அடைவதற்குள் பெருஞ்சேறுபட்டுவிட்டது. களிறுகளையும் கால் வழுக்கப் பண்ணும் பெருஞ்சேறாய் மாறிவிட்டது. அந்நிலையிலும் போர் ஓயவில்லை, களிறுகள், கால் வழுக்கக் கண்டும். தளரவில்லை. களம் முற்றும் உழன்று உழன்று போரிட்டுக்கொண்டே யிருந்தன. ஞாயிறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/67&oldid=1360436" இலிருந்து மீள்விக்கப்பட்டது