பக்கம்:கழுமலப்போர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

புகுந்து களிறுகள் கணக்கற்றனவற்றைக் கொன்று குவித்தனர். களிறுகளின் பிணக்குவியல் பெருமலையெனக் காட்சி அளித்தது. அக்களிறுகளின் பருவுடல்களிலிருந்து பெருகி ஓடிய குருதி வெள்ளத்தால், களம் சேறுபட்டது. சேற்று நிலத்தில் மெல்ல அடியெடுத்து வைப்பதும் இயலாதாயிற்று; அந்நிலையிலும் சோணாட்டு வீரர்கள் சோர்ந்துபோகவில்லை. ஆற்றல் மிகுந்து ஓடி ஓடிப் போரிட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் ஆற்றல் குறைந்திலது என்றாலும், களத்தின் குருதிச் சேறு அவர் கால்களைத் தளைக்கத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் கால்கள் தளர்வுற்றன. வீரர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்தனர்; அதனால் அவர் உடலும் தளர்ந்தன; ஆனால், அந்நிலையிலும் அவர்கள் உள்ளத்தில் உரம் மிகுந்தே விளங்கினர். போர் வெறி அவர் உள்ளத்தை விட்டு அகலவில்லை. மேலேறிச் சென்று தாக்கி, மேலும் பல களிறுகளைக் கொன்று குவிக்க விரைந்தது அவர் உள்ளம்; ஆனால் கால்கள் தளர்ச்சியுறுவதை அவர்கள் உணர்ந்தார்கள். செய்வதறியாது சிறிது திகைத்தார்கள்; அந்நிலையில், களத்தில் அவர்கள் கொன்று வீழ்த்திய வேழங்களின் வெண்கோடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது அவர் கண்ணில் பட்டது; ஊன்று கோலாய் உதவுமளவு நீண்டு வளர்ந்திருந்த அக்கோடுகளைக் காணவே அவர் கலக்கம் அகன்றது. அக்கோடுகளையே ஊன்று கோலாகக் கொண்டு குருதிச் சேற்றைப் பொருட்படுத்தாது, முன்னேறிச் சென்று தாக்கி வென்றனர். என்னே அவர் வீரம்.

“ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்
இழுக்கும் களிற்றுக்கோடு ஊன்றி எழுவர்;
மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து” —களவழி : 3.

உருவிழந்த கருங்காக்கை :

கழுமலக் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடும் சேரர் சோழர் ஆகிய இருதிறப் படையிலும் சிறந்திருந்த வில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/69&oldid=1360446" இலிருந்து மீள்விக்கப்பட்டது