பக்கம்:கழுமலப்போர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

செம்போத்துப் பறவையோ எனச் சிலர் மயங்கக், கருநிறக் காக்கைகள் நிறம் மாற உருமாறிக் காட்சி அளித்தன. அவை அந்த அளவு ஆகுமாறு, அன்று நடந்த அமரில், விற்படை வேற்படை வீரர்கள் வெறிகொண்டு போரிட்டனர்.

“தெரிகணை, எஃகம் திறந்த வாயெல்லாம்
குருதி படிந்து உண்ட காகம்—உருவுஇழந்து
குக்கில் புறத்த; சிரல்வாய; செங்கண்மால்
தப்பியார் அட்ட களத்து.” —களவழி : 5

செம்பஞ்சுக் கூடை :

போர் நெடும்பொழுது நடைபெற்றுவிட்டது. அதனால், அன்றைய போரை அந்த அளவோடு நிறுத்திக்கொள்ளக் கருதினார்கள் படைத் தலைவர்கள். உடனே இருதிறப் படை முனைகளிலிருந்தும் போர் நிறுத்த முரசுகள் முழங்கின. அது கேட்டனர் படை வீரர்கள். படைத்தலைவர் ஆணைக்கு அடங்கிப் பாசறை புக விரும்பினார்கள் அவர்களும், ஆனால், அவர் ஆண்மையும் ஆற்றலும், அதற்குள்ளாகவே போர்க்களம் விட்டுப் போக மறுத்தன. அவ்வுணர்வுகளுக்குக் கட்டுப்பட்டமையால், அவர் கால்களும் கட்டிப் போட்டனபோல் களத்திலேயே நின்றுவிட்டன. போரிடுவதிலேயே கருத்தினைப் போக்கினார்கள் போர் வீரர்கள்.

போர் புரிந்து கொண்டிருக்கும் அவர் கண்களில் பகையரசர்களின் வெண்கொற்றக் குடைகள் புலப்பட்டன. இவ் வெண்கொற்றக் குடையுடையானாகிய வேந்தன்மீது கொண்டுள்ள அன்பினால் அவ்வவோ, அவ்வேந்தன் படையாளர் பேராற்றல் காட்டிப் போர் புரிகின்றனர் என்ற ஆத்திரம் ஒருபாலும், எம் வேந்தனுக்குரிய வெண்கொற்றக் குடைக்கு நிகராக விளங்குவதோ. வேற்றரசர் தம் வெண்கொற்றக் குடையும் என்ற பொறாமை ஒருபாலும் உருக்கொண்டு எழ, இருதிறப் படைவீரரும், எதிர் எதிர் வரிசைகளில் விளங்கிய வெண்கொற்றக் குடைகள் மீது உரங்கொண்டு பாய்ந்தனர்.

க.போ.—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/71&oldid=1360455" இலிருந்து மீள்விக்கப்பட்டது