பக்கம்:கழுமலப்போர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பகையரசன் குடைமீது பாயுங்கால், பகைவர் படை வீரர், தம் அரசன் குடைமீது பாய்ந்து வருவது கண்டனர். அதனால் ஒரு சிலர் மேலே செல்வதை விடுத்துத் தம் வெண்கொற்றக் குடையினைக் காத்து நின்றனர். இதன் விளைவால் கடும் போர் மூண்டது. ஆயினும், இரு திறத்தவர் உள்ளத்திலும், ஊக்கமும், உரமும் உருத்தெழுந்து நின்றமையால் அவர் கருதியது நிறைவேறிவிட்டது. சோணாட்டு வெண்கொற்றக் குடையினைச் சேரநாட்டு வீரர்கள் வெட்டி வீழ்த்தினர். சேரநாட்டு வெண்கொற்றக் குடையினைச் சோணாட்டார் வெட்டி வீழ்த்தினர். ஆனால் அதே நிலையில், அவ்வெண் கொற்றக் குடைகளின் அருகே நின்று அவற்றைக் காத்திருந்த வீரர் பலர், இரு திறத்திலும் உயிரிழந்து வீழ்ந்தனர்.

காம்பற்றுத் தலைகீழாக வீழ்ந்து கிடக்கும் வெண் கொற்றக் குடைகளில், இறந்து வீழ்ந்த வீரர்களின் சரிந்த குடர்கள் நிறைந்திருந்தன. அக்காட்சி, பருத்திப் பெண்டிரின் மனை முன்றில்களில், அடித்துக் கொட்டை போக்கிய செம்பஞ்சினை இட்டு வைத்திருக்கும் கூடைகள் போல் காட்சி அளித்தது. அமைதியான வாழ்வு பெற்றுக் கண்ணுக்கினிய அக்காட்சிகளைக் காட்ட வேண்டிய நாடு, மன்னர்களின் போர் வேட்கையால், அமைதியிழந்து கண்கலங்கும் இக்கொடுங் காட்சியைக் காட்டுவது கண்டு கலங்கிக் கண்ணீர் சொரிகின்றார் புலவர் :

“மைந்து கால்யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்து கால் போகிப் புலால் புகுந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற; புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.” —களவழி: 29

நெய்தல் இடையே வாளை பிறழும் வெள்ளம்

சோணாட்டு வாள் வீரரும் வேல் வீரரும் களம் புகுந்தனர். வாள் வீரர் குதிரைகள் மீது அமர்ந்து சென்றனர். குதிரைகள் நல்ல குதிரைகள். அவற்றின் தொழில் நலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/72&oldid=1360458" இலிருந்து மீள்விக்கப்பட்டது