பக்கம்:கழுமலப்போர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

பிடரி மயிர் அழகாகக் கத்தரித்து விடப்பட்டிருந்த அவற்றின் தோற்ற நலத்திலேயே நன்கு புலப்பட்டது. அத்தகைய குதிரைகள் மீது அமர்ந்து செல்லும் வீரர் கையில் மின்னும் வாள்களும் வெற்றி பல கண்ட விழுச் சிறப்புடைய; பகைவர் உடல்களைப் பல்லாயிரக் கணக்கில் வெட்டி வெட்டி வீழ்த்தினமையால் பெற்ற அவற்றின் வெண்மை நிறம், அவர்கள் அவற்றை வலமாகவும் இடமாகவும் மாறிமாறித் திருப்புத்தோறும் விட்டு விட்டு ஒளி வீசிற்று. வேற்படையாளர் தேர் ஏறிச் சென்றனர். அத்தேர்களின் உச்சியில் சோணாட்டுப் புலிக் கொடி பெருமிதத்தோடு பறந்துகொண்டிருந்தது. சேரநாட்டு வேழப் படையின் தாக்குதலைத் தாங்க வல்ல திண்மை வாய்ந்திருந்தன அத்தேர்கள். அவற்றின் மீது அமர்ந்து செல்ல வீரர் ஏந்திய வேல்கள், பகைவர் படையைச் சேர்ந்த யானைகள் எண்ணிலாதனவற்றின் மீது, எண்ணற்ற முறை எறியப்பெற்றமையால், முனைகள் மிகமிகக் கூர்மைய வாய் மின்னின.

இவ்வாறு ஏற்ற ஊர்திகளில் ஏற்புடைய படைக் கலங்களோடு களம் புகும் அவ்வீரர்களுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. வளம் மிக்க அவர் சோணாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாயும் கார்காலத்தில், ஏரி குளம் முதலாம் நீர் நிலைகளில் நீர் அளவிற்கு மேல் நிறைந்து போவதால், அவற்றின் கரைகள், அந்நீர்ப் பெருக்கைத் தாங்க மாட்டாமல் உடைந்துபோகும். அவ்வுடைப்புக்களின் ஊடே பாய்ந்து வெளிப்படும் செம்புனல் வெள்ளம், நன்செய்களை யெல்லாம் நீர் மயமாக்கி விடும். அவ்வாறு தேங்கி நிற்கும் செந்நீரின் இடையிடையே நெய்தல் மலர்கள் தலைகாட்ட வெள்ளம் கண்டு துள்ளும் வாளைகள் அவற்றைச் சூழ்ந்து சூழ்ந்து வரும். அவர்கள் நாட்டில் கண்டு மகிழ்ந்த அக்காட்சியை அக்களத்திலும் காணவேண்டும் என்று விரும்பினார்கள். வாள் கொண்டும், வேல் கொண்டும் கடும் போர் புரிந்தார்கள். கணப்பொழுதில் களிறுகள் பல உயிரிழந்து வீழ்ந்தன. வீழ்ந்த அவ்வேழங்களின் உடல்கள், பொய்கைக் கரைகளாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/73&oldid=1360460" இலிருந்து மீள்விக்கப்பட்டது